அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக டிஜிட்டல் சேவை வரிகளை விதிக்கும் நாடுகளுக்கு மேலும் புதிய வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூடுதலாக அந்நாடுகளுக்கு, அமெரிக்கச் சிப் ஏற்றுமதிகுத் தடை விதிக்கப் போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகப் பொருளாதாரம், டிஜிட்டல் மயமாகி வருவதால், டிஜிட்டல் பொருளாதாரத்தில் வரி விதிக்கும் வழிகளைக் கண்டறிய சர்வதேச நாடுகள் கடந்த 6 ஆண்டுகளாகவே திட்டமிட்டு வருகின்றன.
டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான நியாயமான மற்றும் விரிவான வரிவிதிப்பு கட்டமைப்பில் உலகளாவிய ஒப்பந்தம் இன்னும் ஏற்படாத நிலையில், அந்தந்த நாடுகள் தனித் தனியாக டிஜிட்டல் சேவை வரியை விதித்து வருகின்றன.
டிஜிட்டல் சேவை வரி (DST) என்பது அமேசான், மெட்டா, கூகிள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் சேவைகளை வழங்கும் நாடுகளில் நேரடி இருப்பைக் கொண்டிருக்கவில்லை.
இதன் விளைவாக, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அந்தந்த நாடுகளின் அதிகார வரம்புகளில் வரி செலுத்துவதில் இருந்து தப்பித்து விடுகின்றன.
டிஜிட்டல் பொருளாதாரத்தின் அளவு அதிகரிப்பதுடன், இந்தத் துறைக்குச் சரியான முறையில் வரி விதிக்க இயலாமையும் சேர்ந்து, வளரும் நாடுகளுக்கான வருவாய் கண்ணுக்குத் தெரியாமல் சுரண்டப் படுகின்றன.
இந்தியாவில் மின்னணு சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி என்ற புதிய வரியை இந்தியா கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரலில் அமல்படுத்தியது.
அதன் மூலம், இந்தியாவில் பதிவு அலுவலகம் இல்லாமல், டிஜிட்டல் சேவை வழங்கும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு 2 சதவீத டிஜிட்டல் சேவை வரி அமலுக்கு வந்தது. ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வரி விதிப்பில் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவைப் போல் கனடா,பிரிட்டன்,இத்தாலி,ஸ்பெயின், ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளும் டிஜிட்டல் வரி விதிப்பு முறையை அமல்படுத்தி உள்ளன.
இந்த டிஜிட்டல் வரி விதிப்பு முறைக்கு ஆரம்பம் முதலே அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. டிஜிட்டல் வரி விதித்த நாடுகள் மீது, அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் கீழ் அமெரிக்கா விசாரணையைத் தொடங்கியது.
குறிப்பாக, இந்தியாவின் டிஜிட்டல் வரி, அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிரானது என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இந்தியாவின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது.
இந்தச் சுழலில், டிஜிட்டல் வரியை அறிமுகப்படுத்திய இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வர்த்தக நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முடிவெடுத்தது. குறிப்பாக இந்தியாவின் டிஜிட்டல் வரி விதிப்புக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கத் திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்கா 2021ஆம் ஆண்டிலேயே அறிவித்தது.
கடந்த ஆண்டு, அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கனடா அரசு 3 சதவீத டிஜிட்டல் வரியை நடைமுறைபடுத்தியது.
இதற்கிடையே, வர்த்தகப் பேச்சுவார்த்தையை ட்ரம்ப் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான டிஜிட்டல் வரியையும் கனடா அரசு ரத்து செய்தது. இதனால் நாடுகளுக்கு இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், டிஜிட்டல் வரிகள் அனைத்தும் அமெரிக்காவுக்குத் தீங்கு விளைவிக்கின்றன என்றும், மறைமுகமாக அவைச் சீனாவுக்கு உதவுகின்றன என்றும் கூறியுள்ள ட்ரம்ப், டிஜிட்டல் வரியை நீக்காத நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.