இந்திய விமானப்படையின் முக்கிய சக்தியாக விளங்கிய MiG 21 போர் விமானங்களின் சேவை, வரும் செப்டம்பர் 26ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. 60 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்த MiG 21 போர் விமானத்தை ஒட்டி, இந்திய விமானப்படைத் தலைவர் ஏ.பி.சிங், நன்றியுடன் பிரியா விடைக் கொடுத்தார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அன்றைய சோவியத் யூனியன் உருவாக்கிய MiG 21 போர் விமானம், உலக விமான வரலாற்றிலேயே அதிகம் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் போர் விமானமாகும்.
தற்போது சர்வதேச அளவில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 11,000க்கும் மேற்பட்ட MiG 21 ரகப் போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இது 1963ம் ஆண்டு, இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட இந்த விமானம், இந்திய விமானப்படையினருக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.
வினாடிக்கு 250 மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் ஏறும் திறன் கொண்ட MiG 21 போர்விமானம் பல் வகைகளில் மேம்படுத்தப்பட்டு, போர்த் திறனை மீண்டும் மீண்டும் நிரூபித்தது.
1965 மற்றும் 1971ம் ஆண்டு பாகிஸ்தான் போரில், முக்கிய பங்காற்றிய MiG 21 போர் விமானம், 1999ஆம் ஆண்டு கார்கில் போரில், பாகிஸ்தானின் அட்லாண்டிக் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.
2019ம் பாலகோட் தாக்குதலின் போது, பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தி சாதனைப் படைத்தது.
1980,1990-களில், இந்திய விமானப்படையில் இருந்த மொத்த போர் விமானங்களில் MiG 21 போர் விமானங்களின் பங்கு 60 சதவீதமாக இருந்தது.
மேலும், இந்திய விமானப்படை விமானிகளில், 90 சதவீதம் பேர் MiG 21 போர் விமானங்களை இயக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்திய விமானப்படையின் 19 படைப்பிரிவுகளில் சுமார் 400 MiG-21 விமானங்கள் பயன்பாட்டில் இருந்துவந்தன.
நவீனமயமாக்கப்பட்ட MiG-21 Bison, நவீனப் போருக்கான அனைத்துத் தொழில்நுட்ப அம்சங்களையும், மேம்பட்ட ஆயுதங்களையும் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
எவ்வளவுதான் நவீனமயமாக்கப்பட்டாலும், MiG-21 போர் விமானத்தைப் பராமரிப்பது கடினமாக உள்ளது. MiG-21 போர் விமானத்தின் வடிவமைப்பு, பல நேரங்களில் நவீனப் போர்த் தேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய்விடுகிறது.
தேஜஸ் மற்றும் ரஃபேல் போன்ற அதிநவீனப் போர் விமானங்களுக்கு இந்தியா முன்னேறிய நிலையில், பழைய போர் விமானங்களுக்கு ஒய்வு கொடுப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.
2017 மற்றும் 2024க்கு இடையில், குறைந்தது நான்கு விமான படைப்பிரிவுகளில் இருந்து இந்தப்போர் விமானங்கள் வெளியேற்றப்பட்டன.
62 ஆண்டுகளில், MiG-21 போர் விமானம் சந்தித்த 400 விபத்துக்களில் 200 விமானிகள் மற்றும் 60 பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே, MiG-21 போர் விமானத்தைப் பறக்கும் சவப்பெட்டிஎன்றும் WIDOW MAKER என்றும் கூறப்படுகிறது.
இந்த MiG-21 போர் விமானம் பிகானெரில் உள்ள நல் விமானப்படைத் தளத்தில் தனது கடைசி அதிகாரபூர்வமான செயல்பாட்டை முடித்துக்கொண்டது. (Nal Air Force Station in Bikaner). மிக் விமானத்தில் தனது பயிற்சியைத் தொடங்கிய தற்போதைய விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ஏ.கே.சிங், சம்பிரதாய நடைமுறையாக MiG-21 போர் விமானத்தில் தனியாகப் பயணித்து பிரியா விடைக் கொடுத்தார்.
சண்டிகரில் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி MiG-21 போர் விமானம் விடைபெறும் விழா நடைபெற உள்ளது.