கடலுக்குள் காற்றாலைகளை அமைத்து மின் உற்பத்தியைப் பெருக்கி வருகிறது டென்மார்க். இதேபோன்றதொரு திட்டத்தைத் தமிழகத்தில் கொண்டுவர டென்மார் பிரதிநிதிகளுடன் மின்வாரிய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. அது எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது.
சர்வதேச அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் டென்மார்க், 1970ம் ஆண்டுகளிலேயே காற்றாலை மின் உற்பத்தியில் கால்பதித்துவிட்டது. புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றாக, நிலையான ஆற்றல் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்ததன் காரணமாக, தனது நாட்டிற்கான மின்சாரத் தேவையின் பெரும் பகுதியைக் காற்றாலைகள் மூலமாகவே பூர்த்தி செய்து வருகிறது.
2002ம் ஆண்டு ஜட்லாண்ட் கடற்கரையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்த் தொலைவில் வட கடலில் உலகின் மிகப்பெரிய கடலோரக் காற்றாலை பண்ணையை நிறுவி மின் உற்பத்தியை உயர்த்தியது.. 2019ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதியன்று முதன்முதலாக, காற்றலை மின் உற்பத்தி, டென்மார்க் நாட்டின் தேவையை விட அதிகமாக இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
2021 ஆம் ஆண்டில், ஸ்காண்டிநேவியாவில் உள்ள பால்டிக் கடலில், மிகப்பெரிய காற்றாலைப் பண்ணையை தொடங்கி மின் உற்பத்தியைப் பெருக்கியது டென்மார்க். வட கடலில் 2050-க்குள் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்துவதாகவும், எதிர்கால சுரங்க உரிமங்களை ரத்து செய்வதாகவும் ஏற்கனவே அறிவித்திருக்கிறது டென்மார்க் அரசு.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, வடகடலில் Jutland தீபகற்பத்தின் கடற்கரையிலிருந்து 80 கிலோமீட்டர்த் தொலைவில் ஒரு செயற்கைத் தீவு அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது டென்மார்க். நூற்றுக்கணக்கான காற்றாலைப் பண்ணைகளில் இருந்து மின்சாரத்தைச் சேகரிக்கும் இந்தத் தீவு, டென்மார்க் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகிக்கும் மையமாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டர்ப் பரப்பளவு கொண்ட இந்தத் தீவு, முதல் கட்டத்தில் 30 லட்சம் ஐரோப்பிய வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும். கப்பல், விமானம் மற்றும் கனரக வாகனங்களுக்கான பசுமை எரிபொருட்களை உற்பத்தி செய்ய அதிகப்படியான காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்தவும் டென்மார்த் திட்டமிடப்பட்டுள்ளது.
இயந்திரங்கள், எரிபொருள் எதுவும் இல்லாமல், காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்திப் பொருட்களைச் சேமிக்கவும், திரவ எரிபொருளாக மாற்றவும் இந்தத் தீவு உதவும் என்று அந்த நாடு நம்புகிறது.
இந்நிலையில், குஜராத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிக நீளமான கடற்கரையைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் உள்ள நிலையில், தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரைக் கடலுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின்னுற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதை மத்திய அரசு அண்மையில் கண்டறிந்தது.
1076 கிலோ மீட்டர்த் தூரம் கொண்ட தமிழகத்தின் கடற்கரையில், இத்திட்டத்தைத் தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தவும் திட்டமிட்டது. கடலில் அமைக்கப்படவுள்ள காற்றாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தங்களுக்கு வழங்குமாறு மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
அதன் முன்னெடுப்பாக டென்மார்க் நாட்டின் டேனிஷ் எனர்ஜி ஏஜென்சி, டென்மார்த் தூதரகம், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் இடையே சென்னையில் கடந்த மே மாதம் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆனால், தமிழக அரசு அதில் தீவிர முனைப்பு காட்டியதாகத் தெரியவில்லை… தரமான சாலைகள் அமைப்பதிலும், பாதாளச் சாக்கடை பணிகளை மேற்கொள்ளவும் முனைப்பு காட்டாமல் ஊழலுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக அரசு, டென்மார்ப் போன்ற சிந்தனைக்கு எப்போது தயாராகும் என்பதே பலதரப்பு மக்களின் கேள்வியாக உள்ளது.