மனிதனுக்குத் தேவையான உடல் உறுப்புகளைச் செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இஸ்ரேலில் உள்ள மருத்துவ மையம் உருவாக்கிய கிட்னி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
மருத்துவ அறிவியல்துறைக் கடந்த சில ஆண்டுகளில் அதிவேகப் பாய்ச்சலில் வளர்ந்து வருகிறது. உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை உலகெங்கும் சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், உறுப்புகளுக்காகக் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
இதற்குத் தீர்வு காண மருத்துவ அறிவியல் துறையில் ஆராய்ச்சியாளர்கள் நுணுக்கமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மனிதனின் உடல் உறுப்புகள், ஸ்டெம் செல்கள் மூலமாகவோ, திசுக்கள் மூலமாகவோ செயற்கையாக ஆய்வகங்களில் வளர்க்கப்படுகின்றன.
மனித உறுப்புகளின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்படும் இந்த உறுப்புகள், பிறவிக்குறைபாடு, விபத்துகள் அல்லது நோய்களால் இழந்த உறுப்புகளுக்குப் பதிலாகப் பொருத்தப்படுகின்றன.
இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள ஷெபா மருத்துவ மையம், டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மீளுருவாக்க மருத்துவம் அடிப்படையில் ஆய்வகத்தில் 3D சிறுநீரகத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறது.
இது 34 வாரங்களுக்கு மேல் உயிர் வாழும் முதல் உறுப்பு என்ற சாதனையை நிகழ்த்தியிருப்பதாகச் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது. முந்தைய ஆர்கனாய்டுகள் நான்குவாரங்கள் கூட உயிர் வாழாத நிலையில், தாங்கள் உருவாக்கிய சிறுநீரகம் 34 வாரங்கள் உயிர் வாழ்ந்து வருவதாக ஷெபா சிறுநீரக மற்றும் ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர்ப் பெஞ்சமின் டெக்கல் கூறியிருக்கிறார்.
சிறுநீரக ஆர்கனாய்டுகள், சிறுநீரகம் செயலிழப்பு, நோய் தாக்கம் போன்றவற்றைக் கண்டறியவும், குணப்படுத்துதலுக்கான அடிப்படையான வழிமுறைகளைப் புரிந்து கொள்ளவும் வழிவகுக்கும்… எலிகள் மீது நடத்தப்படும் மருந்து சோதனைகளைக் குறைக்கவும் உதவும்.
பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தில் எந்தச் செல்களை பயன்படுத்த வேண்டும், செல்கள் சுரக்கும் உயிர் மூலக்கூறுகள், சிறுநீரகப் பாதிப்பை சரி செய்யும் திறன் போன்றவைப் பற்றிய தெளிவான புரிதல் கிடைத்ததும், ஆர்கனாய்டுகள் அடுத்தக்கட்ட ஆராய்ச்சிக்கு நகரும் என்று ஷெபா சிறுநீரக மற்றும் ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர்ப் பெஞ்சமின் டெக்கல் கூறியிருக்கிறார்.
பல்வேறு கட்ட சோதனைகளைக் கடக்க வேண்டியிருப்பதால், பயன்பாட்டிற்கு வர நீண்ட காலம் ஆகும் என்பதும் அவரது கூற்றின் மூலம் தெரியவருகிறது. ஆய்வகச் சிறுநீரக உருவாக்கம் மூலம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை எதிர்காலத்தில் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.