மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பங்கேற்ற போது பவுன்சர்களால் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர், தன்னைத் தாக்கிய பவுன்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் கடந்த 21ஆம் தேதி தவெக மாநாடு நடைபெற்றது. இதில், கட்சித் தலைவர் விஜய் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த உயரமான பாதையில் அவர் நடந்து சென்ற போது ஆர்வம் மிகுதியால் சில இளைஞர்கள் ரேம்ப் மீது ஏறி அவருக்கு மாலை அணிவிக்க முயன்றனர்.
அப்போது, பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞரைப் பவுன்சர் தூக்கி வீசினார்.
இதில் காயமடைந்த சரத்குமாருக்கு யாரும் உதவி செய்யாத நிலையில் வலியால் துடித்தார். இந்த நிலையில், தன்னைத் தாக்கி கண்மூடித்தனமாகக் கீழே தள்ளிய பவுன்சர் மீது உரிய நடவடிக்கைக் கோரி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.