ஜம்மு காஷ்மீரில் தாவி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலம் காட்டாற்று வெள்ளத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குவதால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், தாவி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோட அதன் மேல் அமைந்துள்ள பாலம் பெயர்ந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
எப்போதும் நெரிசல் மிகுந்து காணப்படும் இந்தப் பாலத்தில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருக்க, திடீரெனப் பாலம் உடைந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
ஸ்கார்பியோ உள்ளிட்ட கார்கள் இந்த விபத்தில் சிக்கிக்கொள்ள அந்தப் பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது.
இந்நிலையில், தாவி ஆற்றின் வெள்ளப்பெருக்கில் மேம்பாலம் உருக்குலைந்து கிடக்கும் காட்சி வெளியாகி உள்ளது. தண்ணீர் வரத்து ஓயாத நிலையில், பாலத்தைச் சீரமைக்க நேரம் பிடிக்கும் என்றே கூறப்படுகிறது.