இந்திய கிரிக்கெட் அணிக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தீர்வைத் தரக்கூடியவராக இருந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் ஓய்வுபெற்ற நிலையில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். சுழற்பந்து வீச்சின் ஜாம்பாவானாக, மேட்ச் வின்னராக, விக்கெட் டேக்கராக வலம் வந்த அஸ்வின் ரவிச்சந்திரன் குறித்த சுவாரஸ்மான தகவல் சிலவற்றை இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
சச்சின் டெண்டுல்கள், ராகுல் டிராவிட்டிற்கு அடுத்தபடியாக ஐசிசி கிரிக்கெட் விருதைபெற்ற ஒரே இந்திய வீரர், 50 விக்கெட்டுகள் தொடங்கி 250 விக்கெட்டுகள் வரை அதிவேகமாக வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர், ஆர்ம் பால், கேரம் பால், லெக்பிரேக், கூக்ளி, தூஷ்ரா எனச் சுழற்பந்து வீச்சில் எத்தனை ரகங்கள் இருக்கிறதோ அத்துனையையும் அத்துப்பிடியாக வைத்திருக்கும் மாயாஜாலக்காரன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியில் பார்டர்க் கவாஸ்கர் தொடரின் பாதியிலேயே தன் ஓய்வை அறிவித்த அஸ்வின் தற்போது தனக்கு விருப்பமான ஐ.பி.எல் போட்டிகளில் இருந்தும் முழுமையாக ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். அஸ்வினின் அப்பா ரவிச்சந்திரன் ஒரு வேகப்பந்து வீச்சாளர். ஓடி ஓடி பந்துவீசி களைத்துப் போனதைக் கண்ட அஸ்வினின் அம்மா சித்ரா, தன் மகனும் ஓடி களைத்து விடக்கூடாது என்பதற்காகவே அஸ்வினைச் சுழற்பந்து வீசுவதைத் தேர்வு செய்ய வைத்தார்.
டி 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் என எந்தக் கிரிக்கெட்டாக இருந்தாலும் இந்திய அணிக்கு எப்போதெல்லாம் ஆபத்து நெருங்குகிறதோ அப்போதெல்லாம் அதனை மீட்கும் ஆப்த்பாண்டவனாகவே அஸ்வின் வலம் வந்திருக்கிறார். பல இக்கட்டாண தருணங்களில் இந்திய அணிக்கு விக்கெட் எடுத்துக் கொடுத்துத் திருப்புமுனையை ஏற்படுத்தி ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றக்கூடிய வல்லமைப் படைத்த அஸ்வின், சில தருணங்களில் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு அணிலாகவும் இருந்திருக்கிறார்.
2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர்க் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இந்திய அணி விளையாடியது. அடிலெய்ட் டெஸ்டில் தோற்ற இந்திய அணி, மெல்போர்ன் டெஸ்டில் வென்று ஒன்றுக்கு ஒன்று என்ற சமநிலை வகித்தது.
கேப்டனாக இருந்த கோலி சொந்த வேலைக்காரணமாகத் தாயகம் திரும்ப, ஷமி, ஜடேஜா காயம் காரணமாக விளையாட முடியாத சூழல் உருவாகியது. பின்னர் ரகானே தலைமையில் களமிறங்கிய இந்திய அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸ் முடிவின் படி 407 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், ஆல்ரவுண்டரான அஸ்வின் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து ஆட்டத்தை ட்ரா செய்ய உதவினார். அடுத்தாகக் காபாவில் நடந்த கடைசி டெஸ்டில் வெற்றிப் பெற்று இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியதில் அஸ்வினின் பங்களிப்பு அளப்பரியது.
2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வினின் மைண்ட் கேம் தனித்துவமானது. அந்தப் போட்டியில் கடைசி பந்தில் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்தப் பந்தை அஸ்வின் எந்தவிதப் பதட்டமுமின்றி எதிர்கொண்டார்.
பாகிஸ்தான் வீரர் நவாஸ் வீசிய பந்து வைடாகச் செல்வதை முன்கூட்டியே கணித்த அஸ்வின் அப்பந்தைத் தொடாமல் விடவே ஒரு ரன் எளிதாகக் கிடைத்தது. அடுத்தபந்தில் ஒரு ரன்னை அடித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற அஸ்வினின் புத்திசாலித்தனம் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை அஸ்வின் பல சாதனைகளைப் படைத்து புதுப்புது மைல்கல்களை எட்டியுள்ளார். எத்தனைச் சாதனை படைத்திருந்தாலும் 2016ஆம் ஆண்டு நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் அஸ்வினின் ஆட்டம் தான் இன்றுவரை அவரின் மிகச்சிறந்த டெஸ்ட் ஆட்டமாக இருந்துவருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் அஸ்வின் மட்டுமே 27 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்தார்.
சிஎஸ்கே அணியில் இருந்த போதும் சரி இந்திய அணியில் இருந்த போதிலும் சரி அஸ்வினைத் தனது படைத்தளபதியாகவே தோனி பயன்படுத்தி வந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி இறுதி ஆட்டத்தில் தன் மீது நம்பிக்கை வைத்து பந்துவீச வைத்த தோனிக்கு வெற்றியைப் பரிசளிக்கும் வகையில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இப்படி எப்போதெல்லாம் இந்திய அணிக்கு இக்கட்டான சூழல் வருகிறதோ? அப்போதெல்லாம் களமிறங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்ற கூடிய சக்தி படைத்தவராக அஸ்வின் விளங்கி வந்தார்.
எதிரணிக்குப் பந்துவீசும் போது பேட்டர்களின் மனநிலையை அறிந்து பந்துவீசுவதில் அஸ்வினுக்கு நிகர் அஸ்வின் தான் என்று சொல்லும் அளவிற்கு அவரின் பந்துவீச்சு இருந்துள்ளது. பேட்டர்கள் எந்தச் சூழலில் இருக்கிறார்கள்? பதற்றத்துடன் இருக்கிறார்களா ? நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்களா ? என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்றார்ப் போல அஸ்வின் பந்துவீசுவார். அதைப் போலவே பந்து வீசுவதில் மட்டுமல்லப் பேட்டிங் ஆடும் போதும் அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப பொறுமையாகவும், தேவை ஏற்படின் அதிரடியாகவும் ஆடக்கூடிய ஆல்ரவுண்டராக அஸ்வின் வலம் வந்தார்.
இந்திய அணியில் ஒருமுறை விளையாடி விட்டாலே உள்ளூர் அளவிலான போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்க்கும் வீரர்களுக்கு மத்தியில் பல்வேறு சாதனைகளைப் படைத்த பின்னரும் உள்ளூர்க் கிரிக்கெட்டில் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அஸ்வின். இந்திய அளவில் ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமல்லத் தமிழக அளவில் நடைபெற்ற டி என் பி எல் போட்டிகளிலும் பங்கேற்று அஸ்வின் அசத்தியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த எளிமையான பின்னணிக் கொண்ட சிறந்த வீரர்களை வாய்ப்பளித்து அவர்களை ஊக்குவிப்பதில் அஸ்வின் அதீதக் கவனம் செலுத்தி வந்தார்.
கிரிக்கெட்டுடன் பின்னிப் பிணைந்துவிட்ட அஸ்வினுக்கு மற்றொரு முகமும் உண்டு. அது தான் பிரபல யூடியூபர். பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்களை நேர்காணல் கண்டு அவர்களின் பழைய கால அனுபவங்கள், விளையாட்டின் நுணுக்கங்களை வெளிக்கொண்டு வருவதும் அஸ்வினின் அன்றாட வேலைகளில் ஒன்றாக இருக்கிறது.
தலைசிறந்த ஆல்ரவுண்டராக, இந்திய கிரிக்கெட் அணின் ஆபத்பாண்டவராக, இளம் வீரர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்த அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார் என்ற செய்தி அவரது ரசிகர்களும், விளையாட்டு விரும்பிகளுக்கும் சற்று ஆறுதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.