விபத்தில் உடல் உறுப்புகள் செயலிழந்த இளைஞர் ஒருவர், எலான் மஸ்கின் நிறுவனத்தின் உதவியுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
ஒருபுறம் மனித மூளை அளப்பரிய ஆற்றல் கொண்டதாக விளங்குகிறது. மறுபுறம் கணினி ஒட்டுமொத்த உலகையே கட்டுப்படுத்தும் இடம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த இரு ஆற்றல்களையும் ஒன்றிணைத்தால் மனிதகுலம் மேலும் பல உயரங்களை எட்டும் என நம்புகிறார் எலான் மஸ்க்.
இது குறித்து ஆய்வு செய்ய அவர்த் தொடங்கிய நிறுவனம்தான் நியூராலிங்க். மனித மூளைச் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மனித மூளையில் சிப் ஒன்றைப் பொருத்தி, கணினியுடன் இணைப்பது குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
தொடக்கத்தில் குரங்குகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை, பின்னர் மனிதர்களிடமும் நடத்தப்பட்டது. தற்போது அந்நிறுவனம் தனது ஆய்வில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மூளையில் வெற்றிக்கரமாகக் கணினியின் சிப்பைப் பொருத்திய நியூராலிங்க், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.
2016ம் ஆண்டு நோலண்ட் அர்பாக் என்ற இளைஞர் நீச்சல் பயிற்சியின்போது கீழே தவறி விழுந்தார். இதில் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவரது தோள்பட்டைக்குக் கீழே உடல் செயலிழந்தது. இதனால், படுத்த படுக்கையான அவர், எந்த வேலையையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனையடுத்து, அறுவைச் சிகிச்சை மூலம் அவரது மூளையில் நியூராலிங் சிப் பொருத்தப்பட்டது.
கடந்த 18 மாதங்களாகச் சிப்புடன் வாழ்ந்து வரும் அந்த இளைஞர், தனது அனுபங்களைப் பகிர்ந்துள்ளார். தற்போது தன்னால் இருந்த இடத்தில் இருந்தபடியே தொலைக்காட்சியை ஆன் செய்து பல்வேறு சேனல்களைப் பார்க்க முடிவதாகவும், ஏசியை ஆன் செய்ய முடிவதாகவும், கணிப்பொறியில் வீடியோ கேம் கூட விளையாட முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.
அறுவைச் சிகிச்சைக்கு பின், தன்னால் நிறைய விஷயங்களைச் சுயமாக செய்ய முடிவதாகக் குறிப்பிட்டுள்ள அந்த இளைஞர், தனது வாழ்க்கையே தற்போது வேறு விதமாக மாறியுள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்தச் சிகிச்சையை செய்துகொண்ட முதல் நபர் என்பதில் பெருமையடைவதாகவும், தற்போது தன்னால் 10 மணி நேரம் வரைக் கணினி உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்த முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெகு விரைவில் சொந்தமாகத் தொழில் தொடங்கவும் உள்ளதாகத் தெரிவிக்கிறார் நோலண்ட் அர்பாக். நியூராலிங்கின் இந்த ஆய்வுகள் தொடர் வெற்றிகளைப் பெற்றால், விபத்துகளில் உடல் செயலிழப்பவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் உள்ளிட்டோருக்கு அது ஒரு வரபிரசாதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.