சர்வதேச வர்த்தகம் அழுத்தத்தின் அடிப்படையில் இல்லாமல், சுதந்திரமான விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில், மோகன் பாகவத் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தர்மத்தைப் பின்பற்றும் இந்தியாவின் விதி, உலகை வழிநடத்துவதுதான் எனக் கூறினார்.
கடந்த காலங்களில் தர்மத்தின் வழியில் உலகை இந்தியா பலமுறை வழிநடத்தியதாகவும், இந்தமுறை உலகை வழிநடத்தும் முன்பு இந்தியா தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
உலகில் தற்போதுள்ள பிரச்னைகளுக்குத் தர்மத்தின் கொள்கைகளைப் பின்பற்றாமல் தீர்வு காண முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்தியா எப்போதும் தனது சொந்த இழப்புகளைப் பொருட்படுத்தாமல் நிதானத்தைக் கடைப்பிடித்து வருவதாகவும், தீங்கு விளைவித்தவர்களுக்கும்கூட உதவி செய்துள்ளதாகவும் மோகன் பாகவத் குறிப்பிட்டார்.
மேலும், சர்வதேச வர்த்தகம் அழுத்தத்தின் அடிப்படையில் இல்லாமல், சுதந்திரமான விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் எனக் கூறிய அவர், அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே நாம் இறக்குமதி செய்ய வேண்டும் எனவும், மற்றவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்