அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கையால் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகள் தேக்கமடைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆண்டுக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகின்றன. இதில், 35 சதவீதம் அமெரிக்காவிற்கும், மீதமுள்ள 65 சதவீத ஆடைகள் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
50 சதவிகித வரி விதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதால் அமெரிக்க வர்த்தகர்கள் இந்தியாவில் கொடுத்திருந்த பனியன் ஆர்டர்களைப் பெறுவதில் தயக்கம் காட்டி வருவதாக ஏற்றுமதியாளர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான 35 லட்சம் ஆடைகள் தேக்கமடைந்துள்ளதாகவும், வரி விதிப்பு குறித்த முறையான அறிவிப்பு வரும் வரைப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க வர்த்தகர்கள் கோரி உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, அமெரிக்க வரி விதிப்பு விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்துத் தீர்வு காண வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.