ட்ரம்பின் 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் வளர்ச்சி பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. சேவைத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா, தற்போது உலகளாவிய உற்பத்தி மையமாகவும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2014ம் ஆண்டு முதல்முறையாக நாட்டின் பிரதமரான பிரதமர் மோடி, இந்தியாவில் உற்பத்தி செய், உலகத்துக்கு விற்பனைச் செய் என்ற இலக்கை முன்வைத்தார். உள்நாட்டில் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவித்த மத்திய அரசு, உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு மற்றும் உலகுக்கான உள்ளூர் பொருட்கள் என்ற உத்திகள் நல்ல பலனை அளித்துள்ளன. இப்பொது உலகமெங்கும் இந்தியப் பொருட்களின் இருப்பைக் காண முடிகிறது.
செமி கண்டக்டர் முதல் விமானம்தாங்கிப் போர்க் கப்பல் வரை உலகம் விரும்பும் உற்பத்தி மையமாக இந்தியா மாறியுள்ளது. வளர்ந்து வரும் போட்டித்திறன், உலகச் சந்தையில் இந்திய பொருட்களுக்கான தேவை அதிகரிப்பு, திறமையான பணியாளர்கள், சாதகமான வணிகச் சூழல் போன்றவற்றால் இந்தியாவின் உற்பத்தித் துறைக் கடந்த 11 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்துள்ளது.
ஆயுஷ் பொருட்களும், யோகாவும் உலகம் முழுவதும் சென்றுள்ளன. உலகின் மஞ்சள் தேவையில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக இந்தியாவே வழங்குகிறது. காபி ஏற்றுமதியில் உலகின் 7வது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. மின்னணு பொருட்கள் முதல் எலெக்ட்ரிக் வாகனங்கள் வரைப் பல்வேறு துறைகளிலும் இந்திய உலகளாவிய உற்பத்தி மையமாக மாறியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் உணவு தானியங்கள் உற்பத்தி 265 மில்லியன் டன்னாக இருந்தது. இப்போது 330 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பருப்பு,கரும்பு எனச் சுமார் 2900க்கும் மேற்பட்ட புதிய ரகங்களை இந்தியா உருவாக்கியுள்ளது.
அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி 500 மடங்கு அதிகரித்துள்ளது. மொபைல் போன் உற்பத்தி 2,700 மடங்கும், பாதுகாப்பு தளவாட உற்பத்தி 200 மடங்கும் அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில், உலகளாவிய உற்பத்தி இடர் குறியீட்டில் மூன்றாவது இடத்தில் இந்தியாவும், இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், முதல் இடத்தில் சீனாவும் இருந்தன. இப்போது அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் உற்பத்திக்கான கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 2028 வரை 4.36 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2035ம் ஆண்டுக்குள் இந்தியா 2,13,925 கோடி ரூபாய் ஏற்றுமதி இலக்கை எட்டும் என்று நிதி ஆயோக்கின் அறிக்கைத் தெரிவிக்கிறது.
ஆத்மநிர்பர் பாரத், தொழில்துறைத் தாழ்வார மேம்பாடு, இந்தியாவில் முதலீடு செய்யுங்கள், ஸ்டார்ட்அப் இந்தியா, திறன் இந்தியா, சிறு மற்றும் குறுந் தொழில் உற்பத்தியாளர்களுக்கான கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டம், தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலங்கள் (NIMZs),ஊக்கத் தொகையுடன் இணைக்கப்பட்ட உற்பத்தி திட்டம், தேசிய உற்பத்தி கொள்கை,தேசிய மூலதனப் பொருட்கள் கொள்கை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் மத்திய அரசு நாட்டின் உற்பத்திக்கு ஊக்கமளித்து வருகிறது.
2030ம் ஆண்டுக்குள் உலகப் பொருளாதாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் சேர்க்கும் திறனை இந்தியாவின் உற்பத்தித் துறை கொண்டிருக்கும் என்று வணிக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
சீனாவின் +1 திட்டத்துக்கு மாற்றாக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தியவைத் தங்கள் முதலீட்டுத் தளமாக ஏற்றுக் கொண்டுள்ளன. அதற்கேற்ப, ரஷ்யா,சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் ஆசியான் போன்ற 50-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா ஏற்படுத்தி உள்ளது.
முதலீட்டை ஈர்த்தல், நவீனமயமாக்குதல், சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்குதல் என்று 2014 ஆம் ஆண்டு தொடங்கிய முயற்சியால், இன்றைக்கு உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா மாறியுள்ளது.