ராஜஸ்தானில் 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவன் விடா முயற்சியால் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிப் பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.
பில்வாராவைச் சேர்ந்த ஈஸ்வர் ஒரு எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தைச் சுவலால் குர்ஜார் ஒரு விவசாயி. ஈஸ்வர் 2011 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்துள்ளார்.
தொடர்ந்து மனம் உடைந்து படிப்பை முற்றிலுமாக விட்டுவிடலாமா என்றும் ஈஸ்வர் யோசித்துள்ளார். ஆனால் அவரது தந்தை நம்பிக்கையையும், தைரியத்தையும் இழக்காதே எனக் கூறி, அவரை மீண்டும் முயற்சிக்க ஊக்குவித்துள்ளார்.
2012 இல் மீண்டும் தேர்வெழுதிய ஈஸ்வர் 54 சதவீத மதிப்பெண் பெற்றார். 12 ஆம் வகுப்பில் 68 சதவீத மதிப்பெண் பெற்று, இறுதியில் எம்.டி.எஸ் பல்கலைக் கழகத்தில் பட்டமும் பெற்றார்.
2019 ஆம் ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியரான ஈஷ்வர், தேசத்திற்குச் சேவை செய்ய வேண்டுமென நினைத்துள்ளார்.
அதன்படி உறுதியுடன் பின்னடைவுகளை எதிர்கொண்டு, அவர் UPSC தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்கினார். தொடர்ந்து மூன்று முயற்சியில் தோல்வியைத் தழுவிய அவர், 2022 இல் அகில இந்திய அளவில் 644 ஆம் இடத்தைப் பெற்று இந்திய வருவாய் சேவையில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து 2023 இல் 555 ஆவது இடத்தைப் பெற்று இந்திய காவல் பணியில் சேர்ந்தார். இருப்பினும் 2024 லும் தேர்வு எழுதிய அவர் 483 ஆவது இடத்தைப் பிடித்தார். 10 ஆம் வகுப்பில் தோல்வியைத் தழுவிய ஈஸ்வர் விடாமுயற்சியால் மூன்று முறை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிப் பெற்றதை பலரும் பாராட்டி வருகின்றனர்.