அமெரிக்க அதிபர் டிரம்பின் சுங்க வரி கொள்கைகள் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா இடையே கூட்டணியை வலுப்படுத்தி, 54 டிரில்லியன் டாலர் உலகளாவிய அதிகார மையத்தை உருவாக்கக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பைத் தற்போது காணலாம்…
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்கத் தொழில் வளங்களைப் பாதுகாக்கவும், டாலரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் கடுமையான சுங்க வரிகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். ஆனால், இதன் எதிர்பாராத விளைவு, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று சக்திவாய்ந்த நாடுகளை ஒன்றிணைந்து, ஒரு புதிய உலகப் பொருளாதார சக்தி மையமாகும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த மூன்று நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 53.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது மொத்த உலக உற்பத்தியின் சுமார் மூன்றில் ஒரு பங்கு எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மூன்று நாடுகளும் சேர்ந்து ஆண்டுக்கு 5.09 டிரில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இது உலக வர்த்தகத்தின் ஐந்தில் ஒரு பங்கு எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு, 4.7 டிரில்லியன் டாலராக உள்ளது. இந்த நாடுகளின் மக்கள் தொகையும் 3.1 பில்லியனாக இருப்பதால், இவை உலகின் மிகப்பெரிய நுகர்வோர்ச் சந்தையாக திகழ்கின்றன. இதன் காரணமாகவே இந்த மூன்று நாடுகளும் பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் உலகின் முக்கிய சக்திகளாகத் திகழ்ந்து வருகின்றன.
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி பொருட்களை இந்தியா மற்றும் சீனா அதன் உள்ளூர் நாணயங்களில் வாங்கி வருகின்றன. இதனால், அமெரிக்க டாலரின் சர்வதேச ஆதிக்கம் குறைந்து, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் நாணயக் கையிருப்பு மற்றும் சர்வதேச நாணயத் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதை உணர்ந்த டிரம்ப், டாலரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த புதிய சுங்க வரி கொள்கைகளைக் கையிலெடுத்தார்.
அவரின் செயல்கள் தொடக்கத்தில் டாலரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியாகத் தென்பட்டாலும், அவை இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் கூட்டணியை மறைமுகமாக வலுப்படுத்தியுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த மூன்று நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி பொருளாதாரத்தைத் தாண்டி, பாதுகாப்புத் துறையிலும் வலுவடைந்து வருகிறது. குறிப்பாக இந்த 3 நாடுகளின் பாதுகாப்புத் துறைக்கான ஆண்டு செலவு 549 பில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இது உலகப் பாதுகாப்புத் துறையின் செலவில் 20 சதவீதம் ஆகும். அண்மைக் காலமாக அமெரிக்கா தனது நட்பு நாடுகளிடம் அமெரிக்க ஆயுதங்களையும், உபகரணங்களையும் வாங்க வலியுறுத்தி வருவதும், புது டெல்லி, பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ கூட்டணி கூடுதல் வலுவடைய காரணமாகக் கருதப்படுகிறது.
இந்த மும்மூர்த்திகளின் கூட்டணியால் வருங்காலத்தில் சீனா ஏற்றுமதி தடைகளைச் சந்திக்கும்போது, இந்தியா அதற்கு மாற்று விநியோக மையமாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. இந்தியாவின் சேவைத்துறை மற்றும் மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தை இந்தக் கூட்டணியின் முக்கிய சக்திக் கூறுகளாகப் பார்க்கப்படுவதால், இது சீனாவின் முக்கிய சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உத்திகளில், இந்தியாவின் நிலையை வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் ரஷ்யா–உக்ரைன் போரும், மற்றொருபுறம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தடைகளும், உலகளாவிய வர்த்தகத்தை மறுசீரமைப்பதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், தற்போது உருவெடுத்து வரும் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா கூட்டணி, உலகின் பலதுருவ சக்தி மையமாக மாறும் அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகிறது. இதன் மூலம் வருங்கால உலக வர்த்தகம் சீனாவைத் தாண்டி இந்தியாவை முன்னிலைப்படுத்தியே இருக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.