இறந்து போனவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாருக்குச் சென்றுள்ள ராகுல் காந்தி, 65 லட்சம் ஏழை வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவருடன் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பிரச்சாரத்திற்குச் சென்றிருக்கிறார். இதை நினைத்தால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. யார் கூப்பிட்டாலும் பின்னால் சென்றுவிடலாமா? தமிழ்நாட்டின் பெருமையை நாம் நிலைநாட்ட வேண்டாமா? என அவர் கேள்வி எழுப்பினார்.
முதலில், பீகாரில் என்ன நடந்தது என்பதை நமது முதலமைச்சர் தனது உளவுத்துறை மூலம் விசாரித்துத் தெரிந்துகொண்டு சென்றிருக்க வேண்டும். அங்கு நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில், 22 லட்சம் பேர் இறந்து போனவர்கள், 36 லட்சம் பேர் வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், 7 லட்சம் பேர் இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள்.
இறந்து போனவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ராகுல் காந்தி போராட்டம் நடத்தினால், அதற்கு நமது முதலமைச்சர் ஆதரவு தெரிவிக்கலாமா? இது என்ன நியாயம்? என்றும் அவர் வினவியுள்ளார்.
இதேபோல, முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான கொளத்தூரிலேயே சுமார் 10,000 போலி வாக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலில் அதை சரிசெய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அதிமுகவை இன்னும் திராவிட இயக்கமாகவே பார்க்கிறோம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். அப்படியானால், அவர் இருக்கும் கூட்டணியை விட்டுவிட்டு, ஜெயிக்கப் போகும் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டியதுதானே?
சமீபத்தில் ஒரு காணொளியில், அவர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் கொள்கைகளைப் பாராட்டிப் பேசியதை நான் பார்த்தேன். அவர் ஒரு நல்ல நண்பர். சில கருத்துக்களைத் தெளிவாகப் பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ். என்பது 100 ஆண்டுகளாக நாட்டுக்குச் சேவை செய்யும் ஒரு இயக்கம். திருமாவளவன் மனரீதியாக எங்களை ஆதரிக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். அவர் எங்கள் கூட்டணிக்கு வருவாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.