மதுரை மாநகரில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து மகா சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன.
மதுரை கீழமாசி வீதி பகுதியில் தொடங்கி தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி, சிம்மக்கல் வழியாக விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சிவ வாத்தியங்கள் வாசிக்கப்பட்டதால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆடி பாடி வந்தனர்.
மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட விநாயகரை வழி நெடுகிலும் கூடி நின்ற மக்கள் சாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.