திமுகவின் கல்விக் கொள்கை என்பதே, தனியார் பள்ளிகளுக்குப் பயன்படும் வகையில்தான் அமைந்திருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதை, ஒவ்வொரு ஆண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த 2023 – 2024 கல்வியாண்டில் 42.23% ஆக இருந்த அரசுப் பள்ளி சேர்க்கை விகிதம், 2024 – 2025 கல்வி ஆண்டில் 39.17% ஆகக் குறைந்து, 2025 – 2026 நடப்புக் கல்வி ஆண்டில், 37.92% ஆக மிகவும் குறைந்திருக்கிறது.
நடப்புக் கல்வியாண்டில், தமிழகத்தில் உள்ள 37,595 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை, 2.39 லட்சமாக இருக்கையில், 12,929 தனியார் பள்ளிகளில், 5.26 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இரண்டு மடங்குக்கும் அதிகமாக, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருக்கிறது. தமிழகத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த தொகுதி உட்பட, பல அரசுப் பள்ளிகளில் கட்டிடங்கள் இல்லாமல், மரத்தடியில் வகுப்பறைகள் செயல்படுவதும், பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதும், போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாததும், அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே ஜாதிய வன்மம் அதிகரித்து, மாணவர்கள் தாக்குதலுக்குள்ளாவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் மிகவும் அதிகரித்திருப்பதால், அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை இழந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால், திமுகவின் கல்விக் கொள்கை என்பதே, தனியார் பள்ளிகளுக்குப் பயன்படும் வகையில்தான் அமைந்திருக்கிறது. வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், தனியார் பள்ளிகளில் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு வழங்கப்படும் நேரத்தில், ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
கடந்த ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் கொண்டு வரப்பட்ட LKG, UKG உள்ளிட்ட தொடக்கக் கல்வி, இன்று தமிழக அரசுப் பள்ளிகளில் நடைபெறுவதில்லை.
மேலும், அரசுப் பள்ளிகளில், ஆண்டாண்டு கால திமுகவின் புரட்டுகளை பாடத்திட்டத்தில் திணித்திருப்பதால், கடன் வாங்கினாலும் பரவாயில்லை, தங்கள் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, எளிய குடும்பங்களும், தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கின்றனர்.
இதனால், பெருந்தலைவர் காமராஜர், அரசுப் பள்ளிகள் மூலமாகச் செய்த கல்விப் புரட்சி, திமுக அரசால் இன்று பாழ்பட்டுப் போய்விட்டது. தமிழகப் பெற்றோர்களும், பெரும் கடன் சுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
வெற்று விளம்பரங்கள் மூலமாக, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசின் கையாலாகாத்தனம், இன்று பல்லிளிக்கிறது. திமுகவினர் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே, தமிழகத்தில் அனைத்துத் துறைகளும் செயல்பட்டு வருகின்றன. அதில், பள்ளிக் கல்வித்துறையையும் பலியிட்டிருப்பது வெட்கக்கேடு என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.