அண்டார்டிகாவில் ஒரு இளம் பெண்ணின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுவரை அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான மனித எச்சங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. விசித்திரமான இந்தக் கண்டுபிடிப்பு, அண்டார்டிகா எந்த நாட்டுக்குச் சொந்தம் என்பது பற்றிய கேள்வியையும் உருவாக்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பூமியின் தென்கோடியில் அமைந்துள்ள உலகின் ஐந்தாவது பெரிய கண்டமான அண்டார்டிகா, துருவப் பகுதியில் அமைந்துள்ளதால், நிரந்தரப் பனியுடன் மிகக் குளிர்ந்த பிரதேசமாக உள்ளது.
பனிபடர்ந்த வடதுருவப் பிரதேசமான அண்டார்டிகா மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் இல்லை என்று கூறப்படுகிறது. இக்கண்டத்தின் சில இடங்களில் பனிப் பாறைகள், சுமார் 4000 மீட்டர் ஆழம் வரைக் காணப்படுகிறது.
உலகின் எந்த ஒரு நாட்டின் விஞ்ஞானிகளும் அண்டார்டிகாவில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், தரவுகள் சேகரிக்கவும் முடியும். எனவே அண்டார்டிகா ‘அறிவியல் கண்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இரகசியமான அந்தக் கண்டத்தைப் பற்றிய ஆய்வுகளை நார்வே, ரஷ்யா, இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. அண்டார்டிகாவில் தங்கம், பிளாட்டினம், நிக்கல், தாமிரம், பெட்ரோலியம், குரோமியம்,யுரேனியம் உள்ளிட்ட பல்வேறு கனிமங்கள் உள்ளன
1959-ல் அண்டார்டிகா ஒப்பந்தம் கையெழுத்தானது. பிறகு,1998-ல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நெறிமுறைக் களும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப் பட்டது. அறிவியல் ஆராய்ச்சிக்குத் தேவையானதைத் தவிர, அண்டார்டிக் கனிம வளங்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த ஒப்பந்தம் தடைச் செய்கிறது.
இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சிலி, பிரான்ஸ், நியூசிலாந்து, நோர்வே மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அண்டார்டிகா நிலத்தில் உரிமைக் கோரின என்பது குறிப்பிடத்தக்கது.
கிபி ஏழாம் நூற்றாண்டில் பாலினேசிய ஆய்வாளர் ஹுய் தே ரங்கியோரா (Hui Te Rangiora), அண்டார்டிகாவை அடைந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, 1820 ஆம் ஆண்டு வரை யாரும் இந்தக் கண்டத்துக்குச் செல்லவில்லை. ரஷ்ய ஆய்வாளர் Thaddeus Bellingshausen தாடியஸ் பெல்லிங்ஷவுசன் அண்டார்டிகாவில் மிகவும் உயரமான பனிக்கட்டிக் கரையைப் பார்த்ததாகப் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் தான் 1985-ல் அண்டார்டிகாவின் South Shetland Islands தீவுகளில் உள்ள கேப் ஷிரெஃப்பில் உள்ள யமனா கடற்கரையில் ஒரு தனித்துவமான மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது. இது தெற்கு சிலியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒரு பழங்குடிப் பெண்ணுக்குச் சொந்தமானது.
இந்தப் பெண் 1819 மற்றும் 1825 க்கு இடையில் இறந்ததாகக் கருதப்படுகிறது. இது அண்டார்டிகாவில் இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான மனித அடையாளமாகும். கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் பழமையான இந்த மண்டை ஓடு, அண்டார்டிகாவில் முதன்முதலில் மனிதர்கள் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.
யமனா கடற்கரையில் கடல் கழிவுகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இதைக் கண்டுபிடித்ததாக, சிலி பல்கலைக்கழகத்தின் உயிரியல் மற்றும் இயற்கை அறிவியல் பேராசிரியர் டேனியல் டோரஸ் நவரோ தனது ஆய்வறிக்கையில் தெரிவித்திருக்கிறார். மேலும், யமனா கடற்கரையில் தொடை எலும்பு உட்பட பல எலும்புகள் பரவலாகச் சிதறிக் கிடந்ததையும் நவரோ உறுதி படுத்தியுள்ளார்.
அந்தப் பெண் சிலி நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், ரஷ்யாவின் Thaddeus Bellingshausen தாடியஸ் பெல்லிங்ஷவுசனுக்கு முன்பே அண்டார்டிகாவுக்குச் சென்றிருக்கலாம் என்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அந்தச் சிலி பெண் எப்படி அங்கு சென்றார்? ஏன் சென்றார்? எப்படி இறந்தார்? என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன.
1819ம் ஆண்டில், சிலியின் முனையை அண்டார்டிக் தீபகற்பத்திலிருந்து பிரிக்கும் டிரேக் பாதையில் ஸ்பானிஷ் போர்க்கப்பல் சான் டெல்மோ விபத்துக்குள்ளானதை இந்த மண்டை ஓட்டுடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது. யமனா கடற்கரையில் கண்டுபிடிக்கப் பட்ட மண்டை ஓடு, அண்டார்டிகா எந்த நாட்டுக்கு உரிமை உடையது என்ற சர்ச்சையையும் தொடங்கி வைத்துள்ளது.
அண்டார்டிகா ஒப்பந்தம் 2048-ல் மறுஆய்வுக்கு வரும்போது, அண்டார்டிகாவின் கனிம வளங்களை எடுப்பதற்கான உரிமையைச் சிலி கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது.