இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததன் மூலம், கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் பொறுமையாக கட்டியெழுப்பிய இந்திய- அமெரிக்க உறவு, பாதிப்பை ஏற்படுத்தும் என்று மேற்கத்திய பொருளாதார அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்கா முதலில் என்ற தேசிய வாதத்தை முன்வைத்து அதிபர்த் தேர்தலில் வெற்றிப் பெற்ற ட்ரம்ப், அனைத்து நாடுகள் மீதும் பரஸ்பர வரியை விதித்துள்ளார்.
அதிபரான 30 நாட்களுக்குள், கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி, வெள்ளை மாளிகையில்,பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க, அமெரிக்காவில் இருந்து அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை முன் மொழிந்தார்.
மேலும், இந்தியா- அமெரிக்கா இடையே ஒரு புதிய பரஸ்பர வரித் திட்டத்தையும் அறிவித்தார். 2030ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட மிஷன்-500 என்ற இலக்கு அறிவிக்கப் பட்டது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திட்டங்களை இரு தலைவர்களும் அறிவித்தனர். இதற்காக Terms of Reference குறிப்பு விதிமுறைகளிலும் கையெழுத்திடப் பட்டன.
கடந்த ஜூலைக்குள், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி ஒப்புதலுக்குக் காத்திருக்கிறது என்று கூறப்பட்ட நிலையில், இந்தியா மீது 25 சதவீத வரியை ட்ரம்ப் விதித்தார். தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, கூடுதலாக 25 சதவீதம் வரியை ட்ரம்ப் விதித்தார்.
50 சதவீத வரி விதிப்புக்குப் பின் இந்தியப் பங்குச்சந்தை ஆட்டம் காணும் என்று ட்ரம்ப் எதிர்பார்த்தார். ஆனால் இந்திய பங்குச் சந்தையில் எந்தப் பாதிப்பும் இல்லை. மாறாக, இந்தியாவின் மீதான வரி விதிப்பின் காரணமாக 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கப் பங்கு சந்தை இழப்பைச் சந்தித்தது.
இந்தியாவுக்கு எதிராக அதிக வரி விதிப்பது என்பது உலகின் வலிமையான நபர் என்ற நினைப்பில், தனது காலில் தானே சுட்டுக் கொள்வதற்குச் சமம் என்று அமெரிக்க பொருளாதாரா வல்லுநர் ரிச்சர்ட் ஃவொல்ப் தெரிவித்துள்ளார்.
அதேபோல், முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியான இவான் ஃபைகன்பாம், ரஷ்யா-உக்ரைன் போரை “மோடியின் போர்” என்று ட்ரம்ப் சொல்வது அபத்தமானது என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்ததன் மூலம், இருநாடுகளுக்கும் இடையேயான நீண்டகால உறவுக்கு ட்ரம்ப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா சீனா, ரஷ்யா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் மொத்த உற்பத்தி திறன் 35 சதவிகிதமாகும். இது ஜி-7 நாடுகளை விட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. மேற்கத்திய நிதி ஆதிக்கத்தை, குறிப்பாக டாலரின் ஆதிக்கத்தைக் குறைப்பதே பிரிக்ஸ் கூட்டமைப்பின் நோக்கமாகும்.
ட்ரம்ப் தனது நடவடிக்கையின் மூலம், பிரிக்ஸ் அமைப்பை வலிமையாக்கி உள்ளார் என்றும் மேற்கத்திய அரசியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். வரும் செப்டம்பரில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்பதை இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஏற்கெனவே இந்தியா 40க்கும் மேற்பட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. எனவே, அமெரிக்காவின் வரிவிதிப்பு எந்த வகையிலும் இந்தியாவின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது.
விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கவுள்ள இந்தியா, சர்வதேச அளவில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது .
இந்தியாவுடனான உறவு சிக்கலை, ட்ரம்ப் நினைத்தாலும் அவரால் இனி சரி செய்யமுடியுமா ? என்ற கேள்விக்கு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் சிக்கலானவை என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்துக்கு இன்னும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார்