கோவில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்த கணக்கில் எந்தவித வெளிப்படை தன்மையும் இல்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் வடக்கு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யும் நிலையில் துடியலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பங்கேற்று பேசினார்.
அப்போது, விநாயகர் சிலை ஊர்வலம் இந்து மக்களின் வாழ்வியலில் ஒன்றிணைந்துவிட்டது என்றும், “களிமண்ணை விநாயகராக மாற்றி உயிர் கொடுத்து பின் கரைப்பதில் மிகப்பெரிய அறிவியல் உள்ளதாகவும் கூறினார்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை திமுக அரசும், காவல்துறையும் ஏன் தடுக்கிறார்கள் என தெரியவில்லை என்றும், இதுவரை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்படுத்தியது காவல்துறை தான் என்றும் அவர் தெரிவித்தார்.
கோயில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்ததில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும்,ஒரு அரசு ரூ.3 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கியும் வருமானம் இல்லை என தெரிவித்தார்.
பக்தர்களின் காணிக்கை நகைகளை உருக்கித்தான் அரசாங்கம் நடத்த வேண்டுமா? என்றும், 2026 தேர்தலில் வாக்களிக்கும்போது மக்கள் ஒருமுறை சிந்தித்து பின் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
விநாயகருக்கு கொடுக்கும் மரியாதையை நாம் அளிக்கும் வாக்கிற்கும் கொடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.