சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தொடங்கிய நிலையில், பிரதமர் மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் உற்சாகமாக வரவேற்றார்.
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, 7 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனா சென்றார். மாநாட்டின் ஒருபகுதியாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.
அதன் தொடர்ச்சியாக தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு துவங்கியது. மாநாட்டிற்கு வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் உற்சாகமாக வரவேற்றார். பின்னர், மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்கள் ஒன்றாக நின்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அமெரிக்க வரிவிதிப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஒரே இடத்தில் சந்தித்துள்ளனர். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூவரும் ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். நேபாள பிரதமர் கே.பி.ஒலி, மாலத்தீவு அதிபர் முய்சு, எகிப்து பிரதமர் முஸ்தபா, வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் ஆகியோரை சந்தித்தார். மேலும், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், பெலாரஸ் உள்ளிட்ட நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார்.