தெலங்கானாவில் உரத் தட்டுப்பாடு காரணமாக ஒரு மூட்டை யூரியாவுக்காக விடிய விடிய தூக்கமின்றி விவசாயிகள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் முழுவதும் ஒரு மாதமாக உரத் தட்டுப்பாடு நீடித்து வருவதால் விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்தில் பயிரிட முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அரசு உர விநியோக மையங்களில் அதிகபட்சமாக இரண்டு மூட்டை மட்டுமே யூரியா வழங்கப்படுவதால், விநியோக மையங்கள் முன் இரவு பகல் பாராமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர். மகபூபாபாத் மாவட்டம், டோர்னக்கல் நகரில் உள்ள யூரியா விநியோக மையத்தில் இரவு முதல் காத்திருந்த விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டை, பட்டா புத்தகத்தின் நகலை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அப்போது, யூரியா உரம் வழங்குவதில் நடைபெற்ற குளறுபடிகள் காரணமாக விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், ஆவேசம் அடைந்த அதிகாரிகள் விவசாயிகளின் ஆவணங்களை அலுவலகத்திற்கு வெளியே வீசி எறிந்துள்ளனர். ஒரு பெண் விவசாயி, அதிகாரியின் காலில் விழுந்து ஒரே ஒரு மூட்டை யூரியா வழங்குமாறு கெஞ்சியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நாடு சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஒரே ஒரு மூட்டை யூரியாவுக்காக விவசாயிகள் விடிய விடிய காத்திருப்பது, அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சுவது வேதனை அளிக்கிறது எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு யூரியா கிடைக்க அரசு வழிவகைச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.