பீகார் வாக்காளர் பட்டியல் தொடர்பாகக் காங்கிரஸ் அளித்த புகாரில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
பீகார் வாக்காளர் பட்டியல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் காங்கிரஸ் சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. அதில் சுமார் 89 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தப் புகார் மனுக்களில் காங்கிரஸ் உரிய வழிமுறைகளைப் பின்பற்றவில்லை எனப் பீகார் மாநில தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி, பெயர் நீக்கம் என்பது விதி 13-ன் கீழ் மட்டுமே செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்காகப் படிவம் 7 -ஐ மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். அரசியல் கட்சிகள் நியமித்துள்ள பூத் முகவர்கள் தங்களது ஆட்சேபனைகளை விதிமுறைப்படி சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இத்தகைய ஆட்சேபனைகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டபிரிவு 31-ன் கீழ், அறிக்கையுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ள 89 லட்சம் வாக்காளர்கள் குறித்த தரவுகள் உறுதிப்படுத்தப்படாதவை என்றும் தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.