நாட்டின் பாதுகாப்புக்கு ட்ரோன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது, அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்தா நகரில், நாட்டிலேயே மிகப்பெரிய Aero engine test bed-ஐ ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான Raphe mPhibr தயாரித்துள்ளது. இதை அறிமுகப்படுத்தி பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்திய ட்ரோன்கள் புதிய தொழில்நுட்பப் புரட்சியின் அடையாளமாக மாறும் என்று தெரிவித்தார்.
பொதுவான விமானம் என்ற வார்த்தையைக் கேட்கும்போது, Tejas, ரஃபேல் போன்ற போர் வமானங்கள் நம் நினைவுக்கு வரும் என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்புத்துறையில் மாறிவரும் சக்திகளாக ட்ரோன்கள் உருவெடுத்திருப்பதாகக் கூறினார்.
இன்றைய இளைஞர்கள், ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது மட்டுமல்லாமல், பாதுகாப்புத்துறையில் புதிய சிந்தனையை, புதிய பாதையை உருவாக்குவதாக அவர்க் கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் பறக்கும்போது, அமெரிக்காவோ, சீனாவோ அவற்றைக் கண்டறிய முடியாது என்பது மிகப்பெரிய சாதனை என்றும் குறிப்பிட்டார்.
போர்க் கொள்கையில் ட்ரோன்களை இணைப்பது அவசியமானது என்றும், நவீனப் போர் உத்திக்கும் ட்ரோன்கள் மிகவும் முக்கியமானவை என்றும் தெரிவித்தார்.
ஆத்மநிர்பார்ப் பாரத் திட்டத்தின் கண்ணோட்டத்தில் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் ட்ரோன்கள், தனது வலிமையைப் பிரதிபலித்து வருவதாகவும் கூறினார்.
ட்ரோன்களின் வரலாற்றை எடுத்துரைத்த ராஜ்நாத் சிங், ஆரம்ப காலத்தில் அவைக் கண்காணிப்பு மற்றும் உளவு பார்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். ரஷ்யா, உக்ரைன் போரில் ட்ரோன்கள் முக்கிய பங்காற்றுவதைச் சுட்டிக்காட்டிய ராஜ்நாத்சிங், அவற்றை நமது போர்க் கொள்கையில் இணைப்பது மிகவும் அத்தியாவசியமானது என்பது நிரூபணமாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் முக்கிய இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் செலுத்திய ஏவுகணைகளையும், வான் பாதுகாப்பு ரேடார்களையும் வானிலே தாக்கி அழித்த ‘ஸ்கை ஸ்ட்ரைக்கர்ஸ்’’ ட்ரோன்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. இதுபோன்ற ட்ரோன்கள் பாதுகாப்பு படை வீரர்கள் பலரின் உயிர்களையும் காப்பாற்றியுள்ளது. எனவேதான் ட்ரோன்கள் அடுத்த தலைமுறை ஆயுதம் என வர்ணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.