அமெரிக்க வரி விதிப்புக்கு முன்பே முக்கிய பொருட்களை விற்பனை செய்ய இந்தியா ஏற்றுமதியாளர்கள் பிற நாட்டு சந்தையின் மீது கவனம் செலுத்த தொடங்கியதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய இறக்குமதி பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் 50 சதவீதம் வரி விதித்தார். ஆனால் இந்த வரி விதிப்பிற்கு முன்பே அரிசி, டிராக்டர்கள், ரத்தினக் கற்கள் மற்றும் நகை ஏற்றுமதியாளர்கள் மாற்றுச் சந்தைகளின் மீது கவனம் செலுத்த தொடங்கியதாகத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி ஜூன் காலாண்டில் அமெரிக்காவிற்குக் குறிப்பிட்ட ரத்தினக் கற்கள் மற்றும் நகைப் பொருட்களின் ஏற்றுமதி 20 சதவீதம் குறைந்ததாகவும், அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அந்தப் பொருட்களின் ஏற்றுமதி 76 சதவீதம் அதிகரித்ததாகவும் தரவுகள் வெளியாகியுள்ளன.
அதேபோல் அமெரிக்காவிற்கான அரிசி ஏற்றுமதி 4.8 சதவீதம் குறைந்ததாகவும், வங்க தேசம், ஐக்கிய அரபு அமீரகம், டோகோ மற்றும் கென்யா போன்ற நாடுகளுக்கு அதன் ஏற்றுமதி அதிகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், அமெரிக்காவிற்கான டிராக்டர் ஏற்றுமதி நிதியாண்டின் முதல் காலாண்டில் 22 சதவீதம் சரிந்ததாகவும், இத்தாலி, வங்கதேசம் மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளின் சந்தைகளுக்கு அதன் ஏற்றுமதி அதிகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் மேலும் சில முக்கிய பொருட்களின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.