ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி தீபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இருப்பினும், பல்வேறு சூழல்களைக் கருத்தில் கொண்டு ஓய்வுபெறும் வயதை எட்ட 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் என்றும் அதே வேளையில், ஓய்வுபெற 5 ஆண்டுகளுக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற TET தேர்வில் தகுதி பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இல்லையெனில், ஆசிரியர்கள் தங்களது வேலையை விட்டு வெளியேறலாம் என்றும், ஓய்வு பெறும்போது கிடைக்கும் இறுதி சலுகைகளைப் பெற்றுகொண்டு கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் ஆணையிட்டனர்.
மேலும், அரசு உதவி பெறும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் TET தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா என்பது குறித்து விசாரிப்பதற்காக இந்த வழக்கை உயர்நீதிமன்ற அமர்வுக்கு மாற்ற வேண்டும் என நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.