ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீனா சென்ற பிரதமர் மோடியின் பயணத்துக்குச் சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் Hongqi L5 Limousine “ஹோங்கி” எல்-5’ கார் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பயணத்துக்கு மட்டுமே சீன அதிபரின் “ஹோங்கி” கார் வழங்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீன அதிபர்களுக்கு “ஹோங்கி” கார் ஒரு தேசிய அடையாளமாகும்.
Hongqi “ஹோங்கி” என்பது ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங்கின் காலத்திலிருந்து அதன் தலைவர்களால் பயன்படுத்தப்படும் ஒரு அதிநவீனச் சொகுசு ரகச் சீன கார் ஆகும். சீன மொழியில் Hongqi “ஹோங்கி” என்றால் சிவப்புக் கொடி என்று பொருள்.
சீன அரசுக்குச் சொந்தமான First Automobile Works எனும் நிறுவனத்தால் Hongqi “ஹோங்கி” கார்கள் தயாரிக்கப்படுகின்றன. சீனாவின் தேசிய பெருமையைப் பிரதிபலிக்கும் வகையில் 1958-ல் தொடங்கப்பட்ட இந்தக் காரின் முதல் மாடல் CA72 ஆகும். தொடர்ந்து 1980-வரை CA770 மாடல்கள் வரை Hongqi “ஹோங்கி” கார்கள் தயாரிக்கப்பட்டன.
1990-களில் தொடங்கி, சீனத் தலைவர்கள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்த தொடங்கியதால், Hongqi “ஹோங்கி” கார் காணாமல் போனது.
பின்னர் Audi, Lincoln போன்ற வெளிநாட்டுக் கார்களை Hongqi “ஹோங்கி” என்ற பெயரில் விற்றனர். 2012 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கு உரையாற்றிய சீன அதிபர், சீனத் தலைவர்கள் சீனக் கார்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாவோவுக்குப் பிறகு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, ராணுவத் தலைவர் மற்றும் நாட்டின் அதிபர் என்று சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக இருக்கும் ஜி ஜின்பிங், அமெரிக்காவின் “தி பீஸ்ட்” என்ற சிறப்பு (Cadillac) காடிலாக் காரில் அமெரிக்க அதிபர் பயணிப்பதைப் போன்று Hongqi “ஹோங்கி” யைப் பயன்படுத்தும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, FAW நிறுவனம், மீண்டும் (Hongqi) “ஹோங்கி”-யைப் புதிய வடிவில் அறிமுகப்படுத்தியது. 2014ம் ஆண்டு நியூசிலாந்துக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் (Hongqi) “ஹோங்கி”-யை முதன்முறையாகக் கொண்டு சென்றார். 2019-ல் இந்தியா வந்திருந்த போதும், ஜின்பிங் இந்தக் காரில் தான் சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்குச் சென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் Hongqi L5 கார் தான் சீனாவின் விலை உயர்ந்த கார் ஆகும். Bentley Mulsanne, Rolls-Royce Ghost போன்ற கார்களை விடவும் மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் Hongqi “ஹோங்கி” தயாரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி, குண்டு துளைக்காத கண்ணாடிகள் தொடங்கி, மிகக் கனமான கட்டமைப்பு எனப் பல்வேறு அம்சங்களும் இடம்பெற்றுள்ள இந்தக் காரின் சிறப்புகளில் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.10 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை அடையும் திறன் படைத்த 12 வால்வுகளைக் கொண்ட இன்ஜின் கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.
வெளிநாட்டுத் தலைவர்களுக்கு Hongqi “ஹோங்கி” கார் மிகக் குறைவாகவே பயன்படுத்த தரப்பட்டுள்ளது. 1970-களில் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் வரலாற்றுச் சிறப்புமிக்கச் சீனப் பயணத்தின் போது மாவோ இந்தக் காரையே அவரின் பயணத்துக்கு வழங்கினார்.
பிறகு, 2013 ஆம் ஆண்டில் பிரான்ஸ் அதிபர் François Hollande-க்கு Hongqi “ஹோங்கி” கௌரவ அடையாளமாக வழங்கப் பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில், பிரதமர் மோடிக்கு Hongqi “ஹோங்கி” கார் வழங்கப்பட்டிருப்பது வெறும் மரியாதை மட்டும் அல்ல. அங்கீகாரத்தின் அடையாளமாகும்.
பிரதமர் மோடி கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் முறையாகச் சீனாவுக்குச் சென்றுள்ளார். 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த ராணுவ மோதலுக்குப் பிறகு பிரதமர் மோடியின் முதல் சீனப் பயணமாகும்.
கடந்த அக்டோபரில் கசானில் மோடியும், ஷி ஜின்பிங்கும் சந்தித்த பிறகு, இரு நாடுகளின் உறவுகளில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுடனான தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவைக் குறிப்பிட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், டிராகனும், யானையும் இணைந்திருப்பது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
“வளர்ச்சிப் பாதையில் இரு நாடுகளும் போட்டியாளர்கள் அல்ல, பங்காளிகளாக உள்ளன, இரு நாடுகளுக்கு இடையே முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் அவைப் பிணக்குகளாக மாறக் கூடாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவுடனான உறவுகளை மீட்டெடுக்கும் அடையாளமாகவே பிரதமர் மோடி பயணிக்கச் சீனாவில் Hongqi “ஹோங்கி” கார் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய சீன உறவில் இது ஒரு முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப் படுகிறது.