மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் கழிவுகளும் பாண்டியன் கோட்டைப் பகுதியில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாகப் புகார் எழுந்துள்ளது. சட்டத்திற்கு விரோதமாகக் கழிவுகளை கொட்டும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அவனியாபுரம் அடுத்துள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. அந்தக் குப்பைகளை அள்ளி கிடங்குகளில் கொட்ட ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள அவர்லேண்ட் எனும் தனியார் நிற்வனம் அண்மைக்காலமாகவே திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாண்டியன்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கொட்டி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இரவு நேரங்களில் குப்பைகளைக் கொட்டுவதோடு அதனை அவ்வப்போது தீயிட்டுக் கொளுத்துவதால் பாண்டியன்கோட்டைப் பகுதி முழுவதுமே புகை மண்டலமாகச் சூழ்ந்து பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. குப்பைகள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுவதால் அதில் இருந்து எழும் கரும்புகையால் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
குப்பைக் கிடங்கில் தான் குப்பைகளைக் கொட்ட வேண்டும் என்ற ஒப்பந்தம் போட்ட பின்னரும் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் குடியிருப்பு மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங்களை குப்பைகளைக் கொட்டி வருவதாகப் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் புகார் தெரிவித்துள்ளனர். செப்டிங் டேங்க் கழிவுகள், கட்டுமான கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் என அனைத்துவிதமான கழிவுகளும் கொட்டப்படுவதால் பொதுமக்கள் மட்டுமல்லாது அக்கழிவுகளை உண்ணக்கூடிய கால்நடைகளும் நோய்வாய் பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சட்டத்திற்கு விரோதமாகவும், பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்ளும் தனியார் நிறுவனத்தின் செயல்கள் குறித்து பலமுறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் மீதும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்பதோடு பொது இடங்களில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது.