முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்களின் உண்மை நோக்கம் என்ன? என்று, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக கூறப்படும் 3 நிறுவனங்கள் தமிழகத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக இயங்குவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
இங்கிருக்கும் பணிகளை விட்டுவிட்டு வெளிநாட்டிற்குச் சென்று முதலமைச்சர் படாடோப நாடகம் நடத்த வேண்டிய தேவை என்ன? என்றும் அவர் வினவியுள்ளார்.
தமிழகம் போன்ற அதிகப்படியான GDP கொண்ட மாநிலத்திற்கு மூன்றாயிரத்து 200 கோடி ரூபாய் முதலீடெல்லாம் யானை பசிக்கு சோளப்பொறியே என்று விமர்சித்துள்ள அவர்,
2024ல் ஒரே ஒருமுறை வெளிநாட்டிற்குச் சென்ற மகாராஷ்டிர முதல்வர் 15 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை கொண்டு வந்ததாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.
வெளிநாடுகளுக்கு செல்லாமல் அமைச்சர்களை மட்டும் அனுப்பி 7 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஈர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தமிழக முதலமைச்சரோ 6 முறை உலகத்தைச் சுற்றி 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை மட்டுமே ஈர்த்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.