நாமக்கல்லில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் திமுக வழங்கிய வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என வெற்றிலை விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அழிவை நோக்கி நகரும் வெற்றிலை விவசாயத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் அடுத்த பரமத்திவேலூர், பொன்மலர் பாளையம், வெங்கரை, பாண்டமங்கலம், குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் வெற்றிலைச் சாகுபடி நடைபெற்று வருகிறது.
வெற்றிலைச் சாகுபடியில் ஈடுபட்டும் வரும் விவசாயிகளில் 90 சதவிகிதம் பேர் குத்தகை நிலத்திலேயே சாகுபடி செய்து வரும் நிலையில், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலான விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் இந்த வெற்றிலை விவசாயத்தை மேம்படுத்தவோ, விவசாயிகளுக்கு உதவவோ தமிழக அரசு எந்ததிட்டத்தையும் அறிவிக்கவில்லை என்பது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக வெற்றிலை அனுப்பப்பட்ட நிலையும், படிப்படியாகக் குறைந்து வருவதால் விவசாயிகளின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் கடந்தும் நிறைவேற்றாமல் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிக மருத்துவக் குணம் கொண்ட வெற்றிலையில் இருந்து மருந்துகளைத் தயாரிக்க முன்வரவேண்டும் என்பதோடு, அழியும் தருவாயில் உள்ள வெற்றிலை விவசாயத்தைப் பாதுகாக்க மற்ற சாகுபடிக்கு வழங்கப்படுவதைப் போல வெற்றிலைச் சாகுபடிக்கும் கடன் உதவி வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதோடு தேர்தலுக்கு முன்பாகத் திமுக அளித்த வெற்றி ஆராய்ச்சி நிலைய வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், அதனை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் எனவும் காவிரிக்கரை வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.