காஞ்சிபுரம் அருகே திமுகவைச் சேர்ந்தவரிடம் இருந்து புறம்போக்கு இடத்தை மீட்கக் கோரி 17 வார்டுகளுக்குச் செல்லும் நீரினைப் பொதுமக்கள் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலாற்றை ஒட்டி தேனம்பாக்கம் காலனி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஏற்கனவே இருந்த அங்கன்வாடி மையம் அகற்றப்பட்டுப் புதியதாக கட்டப்பட உள்ளது.
பழைய அங்கன்வாடிக்குப் பின்புறம் புறம்போக்கு இடத்தில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி இருந்தனர்.
ஆனால், அந்த இடத்தினைத் திமுகவை சேர்ந்த நபர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரியையும் அந்த நபர் அலைக்கழித்துள்ளார்.
இதனால் அவர்த் திரும்பிச் சென்ற நிலையில், புறம்போக்கு இடத்தை மீட்டு அங்கன்வாடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள குடிநீர் ஏற்றும் நிலையத்திற்குச் சென்ற மக்கள், 17 வார்டுகளுக்குச் செல்லும் தண்ணீரை நிறுத்தினர். பின்னர் நீரேற்றும் நிலையத்தின் கதவுகளையும் அடைத்தனர்.