மூல வைகை ஆற்றில் முற்றிலும் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுவதால் மலைக் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், மேகமலை அடர் வனப்பகுதியில் உற்பத்தியாகும் மூல வைகை ஆறு வைகையின் பிறப்பிடமாகவும், வைகை அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் விளங்கி வருகிறது.
கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழைப் பெய்யாததால் மூல வைகை ஆறு நீரின்றி வறண்டு காணப்படுகிறது.
மூல வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைக் கிணறுகள் மூலம் 18 ஊராட்சிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மூல வைகை ஆறு வறண்டு காணப்படுவதால் மலைக் கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மேலும், உறைக் கிணறுகள் மூலம் வழங்கப்படும் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.