மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கூட்டமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை உருவாக்கும் சீனாவின் முயற்சிக்கு இந்தியா தடையாக இருக்கிறது. அதற்கான காரணம் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் இந்தியா ஏற்படுத்திய தாக்கம் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவும் சீனாவும் இந்தியாவுக்குக் கொடுத்த முக்கியத்துவமே அதற்குக் காரணம். விளாடிமிர்ப் புதினும், ஸி ஜின்பிங்கும் பிரதமர் மோடியுடன் காட்டிய நெருக்கம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
என்னதான் நண்பராக இருந்தாலும் சீனாவின் சில செயல்களுக்கு இந்தியா ஆதரவு கொடுப்பதில்லை. அதில் ஒன்றுதான் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சி. ஷாங்காய் மற்றும் பிரிக்ஸ் அமைப்புகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகத் திருப்ப நினைக்கிறது சீனா.
ஒத்த சிந்தனைகொண்ட ரஷ்யா, வடகொரியா, ஈரான் உள்ளிட்ட தேசங்களைத் தங்களது லாபத்துக்காகப் பயன்படுத்த சீனா முயல்கிறது. ஆனால் மேற்கத்திய நாடுகள் அங்கம் வகிக்காத அமைப்புகளை அவற்றுக்கு எதிராகத் திருப்ப இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை.
ஷாங்காய் மற்றும் பிரிக்ஸைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால் அவற்றை மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகக் களமிறக்கலாம் என்று சீனா திட்டம் போடுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியாவின் பார்வை வேறாக இருக்கிறது.
பிரிக்ஸ் நாடுகளுக்குக் கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தபோதும் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல் டாலருக்குப் போட்டியாக BRICS CURRENCY-ஐ கொண்டுவரும் எண்ணமும் இல்லை என்பதை இந்தியா தெளிவுப்படுத்திவிட்டது.
உலக அளவிலும் ஆசிய கண்டத்திலும் மிகவும் வலிமை வாய்ந்த நாடாக இருக்கும் இந்தியா ஷாங்காய், பிரிக்ஸ் மற்றும் குவாட் உள்ளிட்ட அமைப்புகளில் சீனாவின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. தெற்குலகத் தேசங்களை மேம்படுத்துவது மட்டுமே இந்தியாவின் குறிக்கோள்.
அதற்கு மாறாகச் சீனா செயல்படுமேயானால் மேற்குக்கும் தெற்குக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் பாலமாக இந்தியா விளங்கும் என்கிறார்கள் புவிசார் அரசியல் வல்லுநர்கள். தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா கூடிய விரைவில் வல்லரசாக மாறிவிடும் என்பதால் அதற்கு முன்பே துண்டுபோட்டு இடம்பிடிக்கப் பார்க்கிறது சீனா. ஆனால் அது நடக்கப்போவதில்லை.