பெரும் எதிர்பார்ப்புடன் இந்திய சந்தையில் கால் பதித்த டெஸ்லா நிறுவனத்திற்கு, மக்கள் போதிய வரவேற்பை வழங்கவில்லை. இதனால், இந்தியாவில் அதன் விற்பனைப் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
உலகளவில் மின்சாரக் கார் உற்பத்தியில் முடிசூடா மன்னனாக வலம் வருகிறது டெஸ்லா. அந்நிறுவனத்தின் காரை வைத்திருப்பதை ஏராளமான மக்கள் கவுரவமாகக் கருதுகின்றனர். டெஸ்லா கார்களின் விற்பனை, எலான் மஸ்கை உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் அமர வைக்கும் அளவுக்கு அதிரிபுதிரியாக உள்ளது.
ஆனால், இந்தப் பெருமை எல்லாம் வெளிநாடுகளில்தான். இந்தியாவில், கதையே வேறு. உலகையே கலக்கி வருவது போல, இந்திய சந்தையையும் ஒரு கலக்கு கலக்கலாம் என்ற கனவோடு, கடந்த ஜூலை 15ம் தேதி மும்பையில் தனது முதல் ஷோரூமைத் திறந்தது டெஸ்லா. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 11ம் தேதி டெல்லியில் தனது 2வது ஷோரூமையும் தொடங்கியது.
எப்படியும் பல்லாயிரக்கணக்கில் கார்கள் புக் ஆகும். அந்த வரவேற்பைக் கொண்டு, தென்னிந்தியாவிலும் பல ஷோரூம்களைத் திறந்துவிடலாம் என டெஸ்லா அதிகாரிகள் கணக்கு போட்டு வந்தனர். இந்தச் சூழலால்தான், தற்போது அந்த அதிர்ச்சி ரிப்போட் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை மொத்தமே 600 டெஸ்லா கார்கள்தான் புக் செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் ஒரு மணிநேரத்திற்குக் குறைந்தது 200 டெஸ்லா கார்கள் விற்பனையாகி வருகின்றன. அப்படிப் பார்த்தால், வெளிநாடுகளில் 3 மணிநேரத்தில் விற்பனையாகும் கார்களின் எண்ணிக்கைதான், இந்தியாவில் இரண்டரை மாதங்களில் விற்பனையாகியுள்ளது.
இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தியாவில் டெஸ்லா அறிமுகப்படுத்தியுள்ள Model Y-ன் தொடக்க விலைச் சுமார் 60 லட்சம் ரூபாய். ஆனால், இதே கார் அமெரிக்காவில் சுமார் 32 லட்சம்தான். அதாவது, இந்தியாவில் 2 மடங்கு அதிக விலைக்கு டெஸ்லா கார் விற்னைச் செய்யப்படுகிறது.
இந்தியாவில் மின்சாரக் கார்களுக்கான இறக்குமதி வரி குறையும்பட்சத்தில் டெஸ்லா கார்களின் வரியும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ட்ரம்ப் தற்போது விதித்துள்ள 50 சதவீத அதிக வரிவிதிப்பு அந்த வாய்ப்பை மங்க செய்துள்ளது.
சார்ஜிங் நிலையங்களின் பற்றாக்குறை, சாலை வசதி உள்ளிட்டவையும் டெஸ்லா கார்கள் அதிகளவில் வாங்கப்படாததற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. கடந்த காலாண்டில் டெஸ்லா நிறுவனத்தின் விற்பனை 13% சரிந்தது. தற்போது இந்தியாவிலும் போதிய வரவேற்பு பெறாததால் சரிவைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது டெஸ்லா.