காஞ்சிபுரம் மாவட்டம் பாலூர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
காஞ்சிபுரம் – சென்னைக் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் அடிக்கடி தாமதமாவதாகக் கூறி, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் பாலூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
சிலர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மின்சார ரயில்கள் தொடர்ந்து தாமதமாக இயக்கப்படுவதாகப் பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால், உரிய நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் அவதிப்படுவதாக வேதனையுடனத் தெரிவித்தனர். ரயில் மறியல் காரணமாக, அவ்வழியாகச் செல்ல வேண்டிய மற்ற ரயில்களும் தாமதமாகின.
சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர், பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து 2 மணி நேரப் போராட்டம் முடிவுக்கு வந்தது.