இரண்டாம் உலகப்போர் வெற்றியின் 80-ஆண்டு நிறைவையொட்டி சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில், நூற்றுக்கணக்கான போர் விமானங்கள், பீரங்கிகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்கள் இடம்பெற்றிருந்தன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்யாவும், அமெரிக்காவும் தங்கள் சொந்த இராணுவ அணிவகுப்புகளை நடத்தின. ரஷ்யாவின் இராணுவ அணிவகுப்பு பாரம்பரிய சடங்காகவே நடந்தது. அதே போல இந்த ஆண்டு நடந்த அமெரிக்காவின் இராணுவ அணிவகுப்பு அதிபர் ட்ரம்பின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகவே அமைந்திருந்தது.
ஆனால், சீனாவின் இராணுவ அணிவகுப்பு, அந்நாட்டின் இராணுவ வலிமையை,அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்குப் பறை சாற்றுவதாகவே அமைந்திருந்தது. 2012-ல் சீன அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து, ஜி ஜின்பிங் தியான்மென் சதுக்கத்தில் இராணுவ அணிவகுப்பை மேற்பார்வையிடுவது இது மூன்றாவது முறையாகும்.
இந்த ஆண்டு, மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இராணுவ அணிவகுப்பில், தியான்மென் சதுக்கத்தின் வழியாக, சீன ராணுவத்தின் 45 பிரிவுகளின் ராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சீருடையில் அணிவகுத்துச் சென்றனர்.
ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் பங்கேற்ற இவ்விழாவில், சுமார் 50,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் உலகப் போரில் சீன வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 80,000 புறாக்கள் மற்றும் 80,000 பல வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன.
இந்த இராணுவ அணிவகுப்பில் சீனாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணை DF-5C இடம் பெற்றிருந்தது. 13,000 கிலோமீட்டர் வரைச் சென்று தாக்கக் கூடிய இந்த ஏவுகணை, இரண்டு அணு ஆயுதங்களை வெவ்வேறு இலக்குகளுக்கு ஒரே சமயத்தில் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.
சீனாவில் இருந்தபடியே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளைத் தாக்க முடியும். மேலும், இந்த ஏவுகணை, இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் மீது அமெரிக்கா பயன்படுத்திய அணுகுண்டைக் காட்டிலும் 200 மடங்கு வீரியமும் ஆற்றலும் கொண்டதாகும். தற்போது சீனாவிடம் 600 அணு ஆயுதங்கள் உள்ளன. வரும் 2030-க்குள் மேலும் 400 அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
அணிவகுப்பில் இடம்பெற்ற இன்னொரு ஆயுதம், இரட்டை-திறன் கொண்ட இடைநிலை-தூர பாலிஸ்டிக் ஏவுகணை DF-26 ஆகும். இது எட்டு சக்கரச் சாலை மொபைல் லாஞ்சரிலிருந்து செலுத்த கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
சுமார் 5,000-கிலோமீட்டர் தூரம் வரைச் சென்று தாக்கக் கூடிய DF-26 ஏவுகணையால், குவாம் மற்றும் வடகிழக்கு ஆசியாவில் உள்ள முக்கியமான அமெரிக்கத் தளங்களையும், ரஷ்யாவின் பெரிய பகுதிகள் மற்றும் முழு இந்தியாவையும் குறிவைத்துத் தாக்க முடியும்.
குறிப்பாக, அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளான பேட்ரியாட், THAAD மற்றும் Aegis போன்ற தற்காப்பு அமைப்புகளைத் தடுக்கச் சீனாவின் சக்தி மிக்க ஆயுதமாகும். ஏழு படைப்பிரிவுகளில் 250 DF-26 ஏவுகணைகளைச் சீனா வைத்துள்ளது.
Transporter-Erector-Launcher என அழைக்கப்படும், DF-61 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய சாலை-மொபைல் ஏவுகணையையும் சீனா காட்சிப் படுத்தியுள்ளது. ஏற்கெனவே சீனா உருவாக்கிய DF-41 அணுசக்தி தடுப்பு ஆயுதக் களஞ்சியத்தின் மேம்பட்ட ஆயுதமாக இந்த ஏவுகணைப் பார்க்கப் படுகிறது. DF-61 ஏவுகணைச் சுமார் 15,000 கிலோமீட்டர் தூரம் வரைச் சென்று தாக்கக் கூடியதாகும்.
சீனாவின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான YJ-17, YJ-19, மற்றும் YJ-20 ஆகிய அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளும் இந்த அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன. இவை இந்திய பசிபிக் பகுதியில் சீனாவின் ஆளுமையை காட்டுகிறது. மேலும், இரண்டு நீர்மூழ்கி ட்ரோன்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
உலகம் ரோபோ நாய்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், சீன இராணுவ அணிவகுப்பில் ‘ரோபோ ஓநாய்கள்’ இடம்பெற்று உலகையே ஆச்சரியப்படுத்தியது. ‘ரோபோ ஓநாய்கள்’ உளவு பார்க்கும் – வீரர்களுக்கு ஆயுதங்களை எடுத்துக் கொடுக்கும்- இலக்குகளுக்கு எதிராகத் துல்லியமான தாக்குதல்கள் நடத்தும்.
இது நவீனகால போர்க் களத்தில் போர் வீரர்களின் உயிரிழப்புகளைக் குறைக்க ஆபத்தான சூழ்நிலைகளில் இந்த ‘ரோபோ ஓநாய்கள்’ பயன்படும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் உயர் மொபிலிட்டி பீரங்கி ராக்கெட் அமைப்புக்குச் சவால் விடும் வகையில் சீனா உருவாக்கியுள்ள PHL-16 என்ற modular launch சிஸ்டம் இராணுவ அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தது.
இதில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பல்வேறு மேம்பட்ட பெரிய அளவிலான ராக்கெட்டுகளை ஏவ முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் முதல் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமான J-20 மற்றும் 99B பீரங்கிகள் உள்ளிட்ட போன்ற பிற ராணுவ தளவாடங்களும் இந்த அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தது.
2027ம் ஆண்டு மக்கள் விடுதலை ராணுவத்தின் நூற்றாண்டு விழாவை சீனா கொண்டாட உள்ளது. அதற்கு முன்னதாக, பென்டகனை விட 10 மடங்கு பெரியதான ராணுவ கட்டளை மையத்தை “பெய்ஜிங் இராணுவ நகரம்” என்ற பெயரில் சீனா உருவாக்கி வருகிறது.
தற்போது நடந்த சீன இராணுவ அணிவகுப்பு, அமெரிக்காவுக்கு ஒரு உறுதியான போர் எச்சரிக்கை என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.