பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும், HEADSET – க்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்…. ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்பின் போது, ஹெட்செட் மாட்ட முடியாமல், ஷெபாஷ் ஷெரீப் தவித்தது தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மீண்டுமா மீண்டுமா என ஷெபாஷ் ஷெரீப்பே கேட்கும் அளவுக்கு ஹெட்செட் பிரச்னை தொடர்ந்து அவருக்குக் குடைச்சல் கொடுத்து வருகிறது. பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில்..!
சீனாவின் சியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியுடன் நட்புறவு பாராட்டிய சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர், ஷெபாஷ் ஷெரீப்புடன் பெயரளவுக்கு மட்டுமே உரையாடியதால், அவர் முகம் வெளிறி காணப்பட்டார்.
உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், ஷெபாஷ் ஷெரீப்புக்கு வழங்கப்படவில்லை எனப் பாகிஸ்தான் மக்களாலேயே வெளிப்படையாக விமர்சிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் புதினோ எதற்கெடுத்தாலும் பிரதமர் மோடிக்கே முக்கியத்துவம் வழங்க, ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்புக்கும் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் கிடைத்தது.
ஆனால், ஷெபாஷ் ஷெரீப்புக்கு அதிபர் புதினை பார்த்தால் என்ன தான் பதற்றம் வருமோ தெரியவில்லை… வழக்கம் போல EAR HEADSET -ஐ பொருத்துவதற்குத் தடுமாற தொடங்கினார். HEADSET-ஐ காதில் மாட்ட ஷெபாஷ் ஷெரீப் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க, இவர் என்ன பண்ணுகிறார் எனப் புன்முறுவலுடன் வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருந்தார் அதிபர்ப் புதின்.
பேச்சுவார்த்தை நடத்த வந்த இடத்தில் இப்படி ஒரு சோதனையா என ஷெபாஷ் ஷெரீப் நினைக்க, ஒரு கட்டத்தில் ஹெட்செட் எப்படி மாட்ட வேண்டும் எனக் கிளாஸ் எடுக்கத் தொடங்கினார் அதிபர் புதின்.
ஷெபாஷ் ஷெரீப் ஹெட்செட் உடன் மல்லுக்கட்டுவது இது முதல் முறையல்ல. உஸ்பெஸ்கிஸ்தான் மாநாட்டின் போதும் இதே காமெடியைத் தான் அரங்கேற்றினார். அப்போதும் எதிரில் இருந்தவர் ரஷ்ய அதிபர் புதின் தான்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பின் இந்தச் செயல் அவரது சொந்த நாட்டிலேயே கேலிக்குள்ளாகி உள்ளது. சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் நாட்டைப் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அவமானப்படுத்திவிட்டதாக எதிர்க்கட்சிகள் வசைபாடிக் கொண்டிருக்க, அதிபர் புதினை பார்த்தால் ஷெபாஷ் ஷெரீப் பார்த்தால் நடுக்கம் வந்து விடும் போலும் என அரசியல் வல்லுநர்கள் கிண்டல் செய்துள்ளனர். 22 கோடி மக்களுக்கான தலைவரா இவர் என சொந்த நாட்டு மக்களே இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.