பொள்ளாச்சியில் தயாரிக்கப்படும் கரும்புச் சர்க்கரை எனும் நாட்டுச் சர்க்கரைக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறைவான லாபத்தில் நடைபெற்று வரும் கரும்புச் சர்க்கரை விற்பனையை அதிகரிக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் பொதுமக்கள் பலரும் தங்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஆரோக்கியமான உணவு முறையை நாடத் தொடங்கியுள்ளனர். வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு கரும்புச்சர்க்கரை எனும் நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எலும்புகளை உறுதிபடுத்தவும், ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் என்பதால் தமிழக மக்கள் மத்தியில் கரும்புச் சர்க்கரை நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது.
பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் கரும்பு சர்க்கரை ஆலைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் கரும்புகளில் இருந்து நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகின்றன. எந்தவித ரசாயனமும் இல்லாமல் கண்முன்னே தயாரிக்கப்படும் கரும்புச் சர்க்கரையைத் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
வெள்ளைச் சர்க்கரையில் தயாரிக்கப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் தற்போது கரும்புச் சர்க்கரையிலும் தயாரிக்கப்படுவதால், ஆரோக்கிய விரும்பிகளின் அன்றாட உணவுப் பட்டியலில் கரும்புச்சர்க்கரைத் திண்பண்டங்கள் தவிர்க்க முடியாத உணவாக மாறியுள்ளது. கேரளத்தில் ஓணம் பண்டிகைக்கான கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் அங்கிருந்து ஏராளமான பொதுமக்கள் பொள்ளாச்சிக்கு வருகைப் புரிந்து கரும்புச் சர்க்கரையை வாங்கிச் செல்கின்றனர்.
பக்குவமாகப் பார்த்து பார்த்துத் தயாரிக்கப்படும் கரும்புச் சர்க்கரைக்கு இணையாக, கலப்பட கரும்புச் சர்க்கரையின் விற்பனையும் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. அதே நேரத்தில் கரும்பு சர்க்கரைக்கான பக்குவப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், வேலை ஆட்கள் ஊதியம் எனப் பல்வேறு செலவுகளுடன் தயாரிக்கப்படும் கரும்புச் சர்க்கரைக்கான விலைக் குறைவாக இருப்பதால் அதனையே நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
குறைந்த லாபம் கிடைத்தாலும் அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான உணவை வழங்குகிறோம் என்ற மனநிறைவோடு பணியாற்றும் கரும்பு சர்க்கரைத் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.