அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 381 மாணவர்கள் ஐஐடியில் இணைந்து தங்களின் கல்வியைத் தொடங்கியுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த ஐஐடி, அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் மூலம் உள்ளங்கைக்கே வந்திருப்பது குறித்து இந்தச் சிறப்புத் தொகுப்பில் பார்க்கலாம்.
அனைவருக்கும் ஐஐடி எனும் திட்டத்தைக் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கிய சென்னை ஐஐடி, டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இரண்டு இணையவழி படிப்புகளையும் அறிமுகம் செய்துள்ளது.
நுழைவுத் தேர்வில் வெற்றிப் பெறுவோருக்கு இப்பாடப்பிரிவுகளைப் பயில வாய்ப்பு கிடைக்கும் நிலையில், இந்த அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் மூலமாக மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் 381 அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியில் இணையவழிக் கல்வியில் இணைந்துள்ளனர்.
ஐஐடியின் இணைய வழிக் கல்வியில் மாணவர்களை சேர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அதற்கெனப் போதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து வருகிறது.
ஆர்வத்துடன் பயிலும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தேர்வுக் கட்டணத்தையும் தமிழக அரசே செலுத்தி வருகிறது. நுழைவுத் தேர்வில் வெற்றிப் பெறும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டுவருமானம் ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் அந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் 75 சதவிகிதத்தை ஐஐடியே செலுத்துகிறது.
தேர்வாகும் மாணவர்கள் எஸ்.சி மற்றும் எஸ் டி பிரிவுகளை சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கான மீதமுள்ள 25 சதவிகிதக் கட்டணத்தையும் தமிழக ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் செலுத்துகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களும் ஐஐடியில் இணைந்து பயில வேண்டும் என்பதற்காகத் தமிழக அரசின் தாட்கோ மூலமாக மட்டும் சுமார் 300க்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தாட்கோவின் முயற்சியால் தற்போது 23 மாணவர்கள் ஐஐடியில் இணைந்திருக்கும் நிலையில் வரும் காலங்களில் மேலும் பலரை இணைய வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பன்னிரெண்டாம் வகுப்பு வரைச் சென்னை மாநகராட்சிப் பள்ளியில் பயின்ற தனக்கு ஐஐடியில் இணைய வழிக் கல்வியில் பயில வாய்ப்பு கிடைத்ததன் மூலம் தன் கனவு நிறைவேறியிருப்பதாக மாணவர்கள் கருதுகின்றனர்.
ஏழை, எளிய பின்னணியை கொண்ட மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த ஐஐடி தற்போது அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் மூலம் உள்ளங்கைக்கு வந்திருக்கிறது. ஐ.ஐடி நிர்வாகத்தின் இந்த முயற்சி அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்ந்த இலக்கை அடைய உறுதுணையாக அமைந்திருக்கிறது.
ஐஐடியில் இணையவழியில் நடைபெறும் இக்கல்வி முறையில் 17 வயது முதல் 81 வயது வரை உள்ளவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயிலலாம் என ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நான்கு ஆண்டுகளில் தமிழக அரசுப் பள்ளிகளில் இருந்து மட்டும் 381 மாணவர்கள் ஐஐடியில் இணைந்திருக்கும் நிலையில், மேலும் பல மாணவர்களை இத்திட்டத்தின் கீழ் இணைக்க தமிழகப் பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.