இந்தோனேஷியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வு அந்நாட்டு மக்களைக் கொதித்தெழ செய்துள்ளது. தலைநகர் ஜகார்தாவைத் தாண்டி பல்வேறு இடங்களிலும் பரவிய போராட்டம், அதிபர்ப் பிரபோவோ சுபியாண்டோவின் பதவிக்கே வேட்டு வைப்பதாக மாறியுள்ளது. என்ன காரணம்… விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில்..!
இந்தோனேஷியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மையில் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. எப்போதும் வழங்கப்படும் ஊதியத்தோடு, மாதாந்திர வீட்டு வாடகைப் படியாக 50 மில்லியன் ரூபியா… அதாவது மூவாயிரத்து 75 டாலர்கள் கூடுதலாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது அந்நாட்டு மக்களைக் கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. இந்தோனேஷியாவில் தனிநபர் ஒருவரின் குறைந்தபட்ச வருமானத்தை விட பத்து மடங்கு கூடுதலாக வீட்டு வாடகைப் படி அறிவிக்கப்பட்டதே இதற்குக் காரணம்… உரிய வேலைவாய்ப்பு இல்லாமல் அன்றாட வாழ்க்கைக்கே தவித்து வரும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தப் பணப்பலன் தேவைதானா என மக்கள் வீதியில் இறங்கிப் போராட, பின்னர் அது கலவரமாக மாறியது. போராட்டக்காரர்களும் போலீசாரும் மாறி மாறி தாக்கிக்கொள்ள, ஜகார்தாவே ரணகளமானது
ஏற்கனவே அதிபர் சுபியாண்டோவின் அரசாங்கம் மீது போராட்டக்காரர்கள் கடும் கோபத்தில் இருக்க, உணவு டெலிவரி ஊழியரின் மரணம் அவர்களை மேலும் கொதிப்படைச் செய்தது. 21 வயதான அஃபன் குர்னியவான் என்ற இளைஞர் கண்டன பேரணியில் பங்கேற்ற போது போலீசாரின் வாகனம் ஏறியதில் உயிரிழந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த போது, போலீசார் திட்டமிட்டு இந்தக் கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாகக் குற்றம்சாட்டினர். இது ஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பட, ஒட்டுமொத்த போராட்டகாரர்களும் உணர்ச்சியில் பொங்கினர். எதிர்ப்பு குரல் எழுப்பினால் கொலை செய்வீர்களா என ஆவேசமான போராட்டக்காரர்கள், மாகாணங்களில் உள்ள நாடாளுமன்ற கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.
தலைநகர் ஜகார்தாவை தாண்டி, சுலவெஷி, யோக்யா கர்தா உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் பரவ, என்ன செய்வதென்று தெரியாமல் சுபியாண்டோவின் அரசாங்கம் விழிபிதுங்கியது. சுலவேஷியில் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேரும், யோக்யா கர்தா கலவரத்தில் 7 பேரும் பலியானதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டது.
கலவரக்காரர்கள் ஆயிரத்து 240 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்த காவல்துறை, 55 பில்லியன் ரூபியா அளவுக்கு பொது சொத்துகள் சேதம் அடைந்திருப்பதாகத் தெரிவித்தது.
இதனிடையே காயம் அடைந்த போலீசாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அதிபர் சுபியாண்டோ, இந்தோனேஷியாவின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விஷமிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்தார். இளைஞர் குர்னியவானின் மரணத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என உறுதியளித்த சுபியாண்டோ, 7 காவல் அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
நாளுக்கு நாள் போராட்டத்தின் தன்மைத் தீவிரமடைந்ததை உணர்ந்த அதிபர் சுபியாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளார். இந்த அறிவிப்பால் கலவரம் சற்று தணியும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதிபர் சுபியாண்டோவுக்கு உள்நாட்டில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியிருப்பது இந்தப் போராட்டம் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
















