உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய வட கொரிய வீரர்களின் தியாகத்தைப் பாராட்டிய ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு நன்றித் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இரண்டாம் உலகப் போரில், சீனாவிடம் ஜப்பான் சரணடைந்து முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடந்தது. இந்நிகழ்ச்சியில் சீனாவின் நட்பு நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
சீன இராணுவ அணிவகுப்புக்குப் பிறகு ஒரே காரில் பயணித்த ரஷ்ய அதிபர் புதினும், வடகொரிய அதிபர்க் கிம்ஜாங் உன்னும் தனியாக சுமார் இரண்டு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இருந்து, உக்ரைன் இராணுவத்தை வெளியேற்றி மீண்டும் அப்பகுதியை ரஷ்யா மீட்டெடுக்க உதவியதற்காகவும், நவீன நாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் இணைந்ததற்காகவும் வட கொரியாவுக்கு ரஷ்ய அதிபர் நன்றித் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்ய வீரர்களோடு தோளோடு தோள் நின்று தங்கள் சொந்த நாட்டைப் பாதுகாப்பது போல ரஷ்யாவைப் பாதுகாத்த வட கொரிய வீரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டியுள்ளார்.
ரஷ்யாவுக்கு உதவுவது தங்களின் சகோதர கடமை என்று புதினிடம் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஷ்யாவுக்கும் அதன் மக்களும் முன்னேற முழு ஆதரவையும் வழங்க வட கொரியா தயாராக உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கிம் ஜாங் உன்-னை ரஷ்யாவுக்கு வருமாறு புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், ரஷ்யாவுக்குச் சென்றிருந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். அப்போது இருநாட்டுத் தலைவர்களும், பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இரு நாடுகளும் தாக்கப்பட்டால் உடனடியாக ராணுவ உதவியை வழங்க, கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று இந்த பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தம் கூறுகிறது.
பனிப்போர் முடிந்ததிலிருந்து இரு நாடுகளும் செய்து கொண்ட மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமாக இதுவாகும். எதிர்பாராத வகையில், ரஷ்யாவின் எல்லைக்குள் ஊடுருவிய உக்ரைன் ராணுவப் படைகள், குர்ஸ்க் பகுதியைக் கைப்பற்றியது. இந்நிலையில்,ரஷ்யாவுக்கு ஆதரவாக, 15, 000க்கும் மேற்பட்ட ராணுவத் துருப்புகளை வட கொரியா ரஷ்யாவுக்கு அனுப்பி இருந்தது.
இராணுவ அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், எந்த ஒரு மிரட்டலுக்கும் சீனா அஞ்சாது என்றும், மனிதக் குலம் போர் அல்லது அமைதி இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் வடகொரியா இரண்டு நாடுகளுமே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கின்றன. சீனாவும் அமெரிக்காவின் வர்த்தகப் போரை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சீனாவின் வெற்றி அணிவகுப்பில் சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் ஒரே மேடையில் ஒன்றாக இருந்தது உலக அரங்கில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.