திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகத்தினர், பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற திரௌபதி முர்மு, ஆண்டாள் யானைக்கு பழங்கள் வழங்கி ஆசி பெற்றார்.
இதையடுத்து மூலவர் சன்னதிக்கு சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ரங்கநாதரை மனமுருகி வழிபட்டார். குடியரசு தலைவர் வருகையை ஒட்டி கோயிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து டெல்லி புறப்பட்ட திரௌபதி முர்முவை காண, திருச்சி கொள்ளிடம் பஞ்சக்கரை அருகே ஏராளமான மக்கள் காத்திருந்தனர். அப்போது அவர்களை கண்ட திரௌபதி முர்மு காரில் இருந்து இறங்கிச் சென்று, நலம் விசாரித்தார். மேலும் தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் அங்கிருந்த குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்குமாறு அறிவுறுத்தினார்.