ஜெர்மனியில் பராமரிப்பில் உள்ள இந்திய குழந்தை ஆரிகா ஷாவைத் திரும்ப ஒப்படைக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான பவேஷ் ஷாவும், அவரது மனைவி தாராவும், கடந்த 2018ஆம் ஆண்டு ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு குடிபெயர்ந்தார்கள். 2021ஆம் ஆண்டு, தம்பதியருக்கு ஆரிஹா ஷா என்னும் பெண் குழந்தைப் பிறந்தது.
ஒருநாள் எதிர்பாராதவிதமாகக் குழந்தைக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது குழந்தையின் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டிருந்ததால், மருத்துவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து குழந்தைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் காப்பகத்திற்குக் கொண்டு சென்றனர்.
தொடர்ந்து ஆரிஹாவின் குடும்பத்தினர் மீதான வழக்கு 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடித்து வைக்கப்பட்ட நிலையில், பெற்றோர் இந்தியா திரும்பினர். இருப்பினும் குழந்தை ஆரிஹாவை அதிகாரிகள் இந்தியாவுக்கு அனுப்பவில்லை.
குழந்தை ஆரிஹா, தனது மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் சமுதாயச் சூழலில் வளர்வதன் அவசியத்தைக் கூறி குழந்தையைத் திரும்ப ஒப்படைக்குமாறு ஜெர்மனியை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அந்த வகையில் குழந்தையை உடனடியாக ஒப்படைக்குமாறு ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.