மணிப்பூர் மாநிலத்திற்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளும் நிலையில், அங்கு நிலவிவந்த இனமோதல் முடிவுக்கு வந்துள்ளன. 2023ம் ஆண்டு மூடப்பட்ட மணிப்பூர் – நாகாலாந்து இடையே தேசிய நெடுஞ்சாலை எண்-2ம் திறக்கப்பட உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் தொடங்கி இரண்டு இனக் குழுக்கள் இடையே மோதல் இருந்து வருகிறது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். வன்முறை காரணமாக மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக குக்கி-ஜோ அமைப்பின் பிரதிநிதிகள், மணிப்பூர் அரசு, உள்துறை அமைச்சக அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதில் கடந்த 2023ம் ஆண்டு மூடப்பட்ட மணிப்பூர் – நாகாலாந்து இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண்-2 ஐ திறக்க உடன்பாடு ஏற்பட்டது. இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டால் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் நிலவும் சிக்கல் தீரும் என்றும், கலவரத்தால் புலம்பெயர்ந்த மக்கள், நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த மக்களின் பிரச்னை தீரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், கையொப்பமிடப்பட்ட நாளிலிருந்து குறைந்தது ஓர் ஆண்டுக்கு, மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பகைமையை நிறுத்தி, நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், மோதல் ஏற்படக் கூடிய இடங்களில் இருந்து தங்களது 7 முகாம்களை இடமாற்றம் செய்யவும், முகாம்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், ஆயுதங்களைப் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கவும் குக்கி- ஜோ அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகக் கூறியிருந்தாலும், மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.
எனினும் பிரதமரின் வருகைக்கான தயார்நிலைக் குறித்து ஆய்வு செய்வதற்காக, மிசோரம் மாநில தலைமைச் செயலாளர்க் கில்லி ராம் மீனா, சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் ஆய்வு நடத்தியிருக்கிறார்.
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு முதல்முறையாகப் பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், குக்கி-ஜோ அடைப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மணிப்பூரின் அமைதிக்கான முயற்சியில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.