பயனர்களின் ஸ்மார்ட் போன்களை மறைமுகமாக கண்காணித்ததாக கூகுள் நிறுவனத்திற்கு 3 ஆயிரத்து 754 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதேநேரம் தங்களது ஸ்மார்ட்போன் கண்காணிக்கப்படுகிறதோ எனப் பயனர்களின் மனதில் ஆழமான சந்தேகமும் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஸ்மார்ட்போன்களின் தரவுகளைக் கண்காணிப்பதாக கூகுள் நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு சான்பிரான்சிஸ்கோவின் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அனுமதியின்றி ஸ்மார்ட்போன்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளை விற்பனை செய்வதாகவும் அதன் மூலம் 3 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு மேல் வருவாய் ஈட்டியதாகவும் பயனர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்குக் கூகுள் நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. இருப்பினும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 425.7 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 3 ஆயிரத்து 754 கோடியே 95 லட்சத்து 7 ஆயிரத்து 50 ரூபாய் அபராதம் விதித்து நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.