ஆவின் கலப்படம் தொடர்பான விவகாரத்தில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 28 பேர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்ட பாலை திருடி அதில் தண்ணீர் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வைத்தியநாதன் உட்பட 28 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவின் நிறுவனம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் டேங்கர் லாரியில் இருந்து பால் திருடப்படவில்லை எனவும் கலப்படம் ஏதும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறிக்கையைப் படித்த நீதிபதி, குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் வழக்கைத் தொடர்ந்து நடத்தினால் எந்தப் பயனும் இல்லை எனவும் கூறினார். இதனால் 28 பேர் மீதான வழக்கை ரத்து செய்தவதாக நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்தார்.