ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின், இந்தியா முப்படைகளை நவீனமயமாக்கி வருகிறது. சுதந்திரத்துக்கு பிறகு மிகப்பெரிய பாதுகாப்பு மேம்படுத்தல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2014 ஆம் ஆண்டு முதல், இந்தியா முன்னெப்போதும் இல்லாத இராணுவ நவீனமயமாக்கலைத் தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வடிவமைத்துள்ள பாதுகாப்புத் துறையின் நவீனமயமாக்கல் திட்டங்கள் அறிமுகப்படுத்த பட்டன.
2016-ல் ஹெலிகாப்டர் தயாரிப்பு தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தின் முதுகெலும்பே ஆயுத உற்பத்தி தான் எனத் தெரிவித்தார்.
மேலும், இனி எந்த ஒரு ஆயுதக் கொள்முதலுக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டாலும், இந்தியாவில் தயாரிப்பதற்கான சாத்தியகூறுகளை ஆராய்ந்த பின்னரே, அதற்கான பணிகளைச் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
2021ம் ஆண்டில், இந்தியாவை ஒரு ராணுவ-தொழில்துறை சக்தியாக மாற்ற வடிவமைக்கப்பட்ட 20 சீர்திருத்தங்கள் கொண்ட ஒரு சிறுநூலை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டிருந்தார்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு உத்திகள் மற்றும் கோட்பாடுகளைத் தயாரிப்பதற்காக 2018-ல் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் தலைமையில் பாதுகாப்பு திட்டமிடல் குழு (DPC) அமைக்கப்பட்டது.
ஆத்மநிர்பர் பாரத் மூலம் 500 க்கும் மேற்பட்ட மிகவும் சிக்கலான ஆயுத அமைப்புகள், சென்சார்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்கப் பரிந்துரை செய்யப்பட்டன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்கவும், ஆயுத ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும் 2033ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய உள்நாட்டு ராணுவ தளவாட ஒப்பந்தங்களையும் மேற்கொள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.
இந்தியக் கடற்படையில் இந்த ஆண்டுக்குள் 10 புதிய போர் கப்பல்கள் இணைக்கப்பட உள்ளன. மேலும் அணுசக்தி போர்க் கப்பல்கள் உட்பட 17 போர் கப்பல்கள், 9 நீர்மூழ்கிக் கப்பல்கள் விரைவில் சேர்க்கப்படவுள்ளன.
விமான படையை பொறுத்தவரை, பிரம்மோஸ் ஏவுகணையை விட 3 மடங்கு சக்தி வாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வருகிறது.
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், அடுத்த தலைமுறை பிரம்மோஸ், புதிய ஏர் டிஃபென்ஸ் அமைப்புகள் என விமான படைகாக பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
குறிப்பாக, இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் முதல் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானம் பயன்பாட்டுக்கு வரும் என்றும், 2035 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 120 விமானங்கள் தயாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 75 உயரமான போலி செயற்கைக்கோள்கள், 150 ஸ்டெல்த் பாம்பர் ட்ரோன்கள் உள்ளிட்ட பல மேம்பட்ட ஆயுதங்கள் சேர்க்கப்பட உள்ளன.
இந்திய விமானப்படை தனது போர் விமானங்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Smart Anti-Airfield Weapon (SAAW) என்ற நவீன ஆயுதத்தை விரைவில் பெறும் என்றும் கூறப்படுகிறது.
T-72, T-90 ஆகிய பீரங்கிகளை ஒன்றிணைத்து, ஒரு புதிய பீரங்கிகளை இந்தியா உருவாக்கியுள்ளது. மேலும், ரஷ்யா தனது அடுத்த தலைமுறை டி-14 அர்மாட்டா பீரங்கியின் மேம்பட்ட மாடலை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. 2027 முதல் இந்தப் பீரங்கிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 1,800 எதிர்கால பீரங்கிகள், மலைப் போருக்காக 400 இலகு ரகப் பீரங்கிகள், 50,000 பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட ரோபோ எதிர்-IED அமைப்புகளையும் இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட உள்ளன.
உலகில் நான்காவது பெரிய ராணுவமாக விளங்கும் இந்தியா, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு தனது இராணுவப் பலத்தை அதிகரித்து வருகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான தனது போரைத் தீவிரமாக்க இந்தியா தயாராக உள்ளது என்பதையும், எந்தவொரு அவசரநிலைக்கும் தன்னை பலப்படுத்திக் கொள்கிறது என்றும் பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.