நெல்லையில் அரசு அறிவித்த நாளை கடந்தும் பொருநை அரசு அருங்காட்சியகம் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான ஒரு செய்தித் தொகுப்பைத் தற்போது காணலாம்.
திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி நான்கு வழிச் சாலை அருகேயுள்ள சுமார் 13 ஏக்கர் நிலப்பரப்பில், 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொருநை அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனக் கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
சிவகலை, ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட பண்டைய நாகரிகக் கலைப் பொருட்களை காட்சிப்படுத்தும் பொருட்டு, பொதுப்பணித்துறைச் சார்பில் இந்த அருங்காட்சியகம் மிகப் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.
கட்டுமான பணிகள் 18 மாதங்களுக்குள் நிறைவடையும் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் ஏ.வ வேலுவும் 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அருங்காட்சியகம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், கடந்த 2023-ம் ஆண்டே முதலமைச்சர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டுத் தொடங்கிய அருங்காட்சியகக் கட்டுமான பணிகள், 2 ஆண்டுகளைக் கடந்தும் தற்போது வரைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல, 33 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்ட கட்டுமான பணிகளும், தற்போது 56.36 கோடி ரூபாய் வரைச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிவிக்கப்பட்ட காலக்கெடு முடிந்து 5 மாதங்கள் கடந்தும் கட்டுமான பணிகள் இன்னும் முடிவடையாமல் இருப்பது, அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு வழிச்சாலையை ஒட்டி கட்டப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகத்திற்கு, அதிகாரிகள் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.
மக்கள் வரியாகச் செலுத்தும் பணத்தில் பல கோடி ரூபாயைச் செலவு செய்து கட்டப்பட்டு வரும் அருங்காட்சியத்தைச் சுற்றி, ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லாத காரணத்தால் அப்பகுதியில் பல சட்டவிரோதச் செயல்கள் அரங்கேறி வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்காலும், மந்தமாக நடைபெற்று வரும் கட்டுமான பணிகளாலும், பொருநை அரசு அருங்காட்சியகம் மக்கள் பயன்பாட்டிற்கு வர இன்னும் ஒராண்டு வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக மக்களின் பண்டையகால பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை, வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள பெருதவியாக இருக்கக்கூடிய இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமான பணிகளை, விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நெல்லை வாழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது.