இந்தியா – அமெரிக்கா உறவுகள் குறித்த டிரம்பின் உணர்வுகளை பாராட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் மீதான போரை ஊக்குவிப்பதாக கூறி இந்தியா மீது மொத்தம் 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்திருந்தது. இதனையடுத்து சீனாவின் ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரிடம் கலந்துரையாடியது உலகளவில் கவனம் ஈர்த்தது.
அதனை தொடர்ந்து இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டமைப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், இரு நாடுகள் இடையே சிறப்பான உறவுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பான செய்தியை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், இந்தியா-அமெரிக்கா உறவுகள் குறித்த டிரம்பின் உணர்வுகளையும், நேர்மறை மதிப்பீட்டையும் ஆழமாக பாராட்டுகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மேலும், இரு நாடுகளும் நேர்மறையான எதிர்காலத்தை நோக்கமாக கொண்ட விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை கொண்டுள்ளன எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.