சென்னையில் டிஜிபி அலுவலகத்திற்கு வருகை தந்த புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் மூர்த்தியை போலீசார் முன்னிலையில் விசிகவினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையில் பாமக மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் என்பவரை மர்ம நபர்கள் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிய பாமகச் சட்டமன்ற உறுப்பினர் அருள் டிஜிபி அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வர இருந்தார்.
இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகப் புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் மூர்த்தியும் டிஜிபி அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த விசிக நிர்வாகி முருகன் மற்றும் அவரின் நண்பர்கள் மூர்த்தியை தடுத்து நிறுத்தியதோடு அவரை காலணியை வைத்து தாக்கினர்.
போலீசார்த் தடுக்க முயன்றும் அவர்கள் தொடர்ந்து மூர்த்தியின் சட்டையை கிழித்த படி தாக்கினர். இதற்குப் பதில் தாக்குதல் நடத்த முயன்ற அவர் தனது பையில் வைத்திருந்த கத்தியை காட்டியபோது விசிக நிர்வாகி முருகன் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பியோடினர்.
இதனையடுத்துச் செய்தியாளர்களை சந்தித்த அவர், விசிகத் தலைவர் திருமாவளவன் தன்னை கொலைச் செய்ய முயற்சிக்கிறார் எனக் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் கொலை முயற்சி சம்பவம் காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் தெரிந்தே நடப்பதாகவும் புகாரளித்தும் பலனில்லை எனவும் தெரிவித்தார்.