முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்களாலான தொலைதொடர்பு அமைப்புக்கு டெக் என்றழைக்கப்படும் தொலைத்தொடர்பு பொறியியல் மையம் அனுமதி சான்றிதழை வழங்கியுள்ளது. இந்தத் தகவலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்களில் இயங்கும் ஒரு தொலைத்தொடர்பு அமைப்பு, தர சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது இந்தியாவின் செமிகண்டக்டர் வரலாற்றில் புதிய பெரிய பாய்ச்சல் என்றும் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக இந்தியா ஸ்மார்ட்போன்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், கார்கள் மற்றும் தரவு மையங்கள் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கு இறக்குமதி செய்யப்பட்ட சிப்களை பெரிதும் சார்ந்திருந்தது.
தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்களுக்கு TEC தரச் சான்றிதழ் அளித்துள்ளதால், இனி வெளிநாடுகளில் இருந்து சிப்களை இறக்குமதி செய்வதை குறைக்க முடியும் என்றும், இது செமிகண்டக்டர் துறைகளில் முன்னேற்றத்தை காட்டுவதாக தொலைத்தொடர்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.